பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் மேற்கொள்ளும் விரதம் நாகசதுர்த்தி. இந்நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். இந்த விரதம் ஆகஸ்ட் 14ல் வருகிறது. அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம். திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்ளலாம். அன்று வாசலில், சிறிய அளவில் பாம்புக்கோலம் இட வேண்டும். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து, செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். பாம்பு தீண்டி இறந்த தன் சகோதரர்களைக் கண்டு வருந்திய பெண் ஒருத்தி நாகராஜரை வேண்டி பூஜித்தாள். நாகராஜரும் மகிழ்ந்து, அவளுடன் பிறந்த ஐந்து சகோதரர்களையும் உயிர் பிழைக்கச் செய்தார். இந்த நிகழ்ச்சி நடந்த நாளாக நாக சதுர்த்தி கருதப்படுகிறது. இந்நாளில் நாகர்கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில், கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று வணங்கி வரலாம்.
ஆதிசேஷன், வாசுகி, பத்மன், மகாபத்மன், தக்ஷகன், கார்க்கோடன், சங்கன், சங்கபாலன் ஆகிய நாகங்களின் பெற்றோர் கச்யபர் - கத்ரு தம்பதிகள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷன், திருமாலின் படுக்கையாக பூமியைத் தாங்கும் பாக்கியம் பெற்றார். திருபாற்கடலைக் கடைந்து அமிர்தம்பெற தேவாசுரர்கள் முயன்றபோது. வாசுகி என்னும் பெரும் பாம்பினை கயிறாகப் பயன்படுத்தினார்கள். பத்மன், சூர்யாந்தர்யாமி எனும் மந்திரத்தை தர்மாரண்யன் எனும் அந்தணருக்கு உபதேசித்தவர். மகாபத்மன் வடதிசையின் காவலன். கார்க்கோடகன் ஈசனின் மோதிரமாகத் திகழ்கிறார். தக்ஷகன் பரீட்சித்து மகாராஜனைக் கடித்து வைகுண்டம் அனுப்பினார். சங்கபாலன், ஈசனின் சிகரத்தை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்றார். தமிழகத்தில் வடஆற்காடு கீழ்தஞ்சை மாவட்டம், கன்னியாகுமரி போன்ற தலங்களில் நாக கன்னிகைகள் கோயில்கள் உள்ளன.
துரபி, சாதான், வித்திட்டி, குஞ்சினி, பாவனா, சரிகா, தூந்திரி என்கிற ஏழு பெண்கள் நாகக்கன்னிகைகளாக பூலோகத்தில் இந்திரன் அருள்பெற்று வந்ததாகவும், அவர்கள் சில கோயில்களில் சிலா வடிவத்தில் எழுந்தருளியிருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நாகக்கன்னிகைகள் தம்மை வழிபடும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்களை நீக்கி, விரைவில் திருமண பாக்கியத்தை வழங்குகிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள்தான் நாகத்தை வணங்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். அனைவருமே நாகர்சிலையை வழிபடலாம். நாகங்கள் குடியிருக்கும் புற்றுக்குப் பூஜை செய்தாலும் தோஷங்கள் நீங்குவதுடன் நினைத்த நல்ல காரியங்கள் வெற்றியடையும். எனவே, நாகசதுர்த்தியன்று நாகர்சிலை உள்ள கோயில் அல்லது நாகநாதர் என்று பெயர்பெற்ற ஈசன் கோயிலுக்குச் சென்று வழிபட நலமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு - முதல் திருவந்தாதி 53.
நாக சதுர்த்தியும் மறுநாள் கருட பஞ்சமியும் இந்த இரு பண்டிகைகளும் சகோதரர்களின் சவுபாக்கியத்திற்காக வேண்டி சகோதரிகள் கொண்டாடும் பண்டிகையாகும். 1. கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் ஏற்கும் நோன்பு. 2. தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் விரதம் இருந்து வேண்டிக்கொள்ளும் நாள் நாகசதுர்த்தி.
இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணிபணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு அரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே!
என்று குலசேகர ஆழ்வாரால் போற்றப்படும் அரங்கநாதன் பள்ளி கொண்டுள்ள பாம்பனையின் சிறப்பு மகத்தானது.
இருள் சிதறி ஓடும்படியாக பிரகாசிக்கின்ற மாணிக்க மணிகள் ஆதிசேஷனின் நெற்றியில் நிறைந்திருக்கின்றன. அனந்தன் மீது சவுர்யமாக படுத்து யோக நித்திரை செய்கிறார் பெரிய பெருமாள் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கநாதன். நீலமணிபோல மிக அழகாக விளங்கும் அப்பெருமானை என் கண்களால் ஆசை தீரக்கண்டு மகிழும் நாள் என்று வருமோ? என்று தனது தீராத ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார்.
எம்பெருமானைத் தாங்கும் ஆதிசேஷன்: நாகலோகத்தில் போகவதி என்ற நகரம் இருந்தது. அதுவே நாகர்களின் தலைநகர். அந்த நாட்டில் வசித்த நாகர்கள் ஒருநாள் அனந்தனிடம் வந்து நீயே எங்கள் தலைவனாக இருக்க வேண்டும் என்று வேண்டினர். ஆனால் அவனோ பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கே கைங்கர்யம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று பணிவாகத் தெரிவித்தான். பிறகு அனந்தன் தனது சகோதரனுக்கு பட்டாபிஷேகம் செய்து முடிசூட்டி சர்ப்பராஜ னாக்கி விட்டு, அரண்மனை, சுகபோகங்கள் ஆகியவற்றை துறந்து பூலோகம் வந்து ஆரண்யத்தை அடைந்தான். மகாவிஷ்ணு வைக்குறித்து தீவிரமாக தவம் மேற்கொண்டான்.
பல காலத்திற்குப் பிறகு அனந்தன் தவத்தைக் கண்டு மெச்சிய மகாவிஷ்ணு அவன் எதிரே தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். திருமாலே! தங்கள் மீது எக்காலத்திலும் எனது பக்தி குறைவுபடாமல் இருக்க வேண்டும். எப்போதும் தங்கள் அருகிலேயே இருந்து பணிவிடை செய்யும் பாக்கியம் வேண்டும் அதற்காக நான் தங்கள் படுக்கையாக இருக்கும் வரத்தை அளிக்க வேண்டும் என்று வேண்டினான்.
தவமிருந்து வரம் கேட்பவர்கள் ராஜ்ஜியம் வேண்டும், சாகாவரம் வேண்டும் என்றெல்லாம் கேட்பதைத்தான் பார்த்திருக்கிறேன். அனந்தா உண்மையாகவே நீ என்னுடைய பக்தன். எனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று கேட்கிறாய். உன் அன்பும் பக்தியும் கண்டு மகிழ்கிறேன். உன் விருப்பப்படி இனிமேல் எனக்கு நீயே பாயாக இருப்பாய் என்ற வரத்தை தந்து மறைந்தார். அது முதல் மாதவனுக்கு, அனந்தன் பாம்புப் படுக்கையாக மாறினான். அனந்தன் மீது மகா விஷ்ணு நூறு கல்பகோடி காலம் யோகத்துயில் கொண்டர். அந்த நேரங்களில் அவரது நித்திரைக்கு எந்த பங்கமும் வராமல் அனந்தன் மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொண்டான்.
விசேஷமான உறங்காப்புளி: ஆதிசேஷனே ராமாவதாரத்தில், அவரது தம்பி லட்சுமணனாக வந்தார். (கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறந்தார். ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் தங்கி இருந்த புளியமரமாக அவதாரம் செய்தவரும் ஆதிசேஷனே. உடையவராக வந்தவரும் அனந்தனே.
எம்பெருமான் எங்கே சென்றாலும் ஆதிசேஷனை விட்டு பிரிய மாட்டார். அப்படியொரு அந்நோன்யம் இருவருக்கும் உண்டு. அதனால்தான் நம்மாழ்வாராக எம்பெருமான் அவதரிக்க விருப்பம் தெரிவித்தபோது, அனந்தனை உடனே நீ சென்று பூவுலகத்தில் புளிய மரமாக நின்று கொள். நான் அங்கே வந்து அந்த மரப்பொந்தில் வாசம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார். அப்படியே செய்தும் காட்டினார். அதனால்தான் நம்மாழ்வார் அவதார ஸ்தலமாகிய ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூர் இன்றும் கூட சேஷ க்ஷேத்திரம் அதாவது ஆதிசேஷன் இருப்பிடம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த க்ஷேத்திரத்தில் ஆதிசேஷன் புளிய மரமாக இருக்கிறார்.
நாக வழிபாடு: நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும் பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும் நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்தும் வருவர். இந்த துன்பங்களிலிருந்து மீளவும் நல்ல பலன்களைப் பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். அதனால் நாக பஞ்சமி நாகசதுர்த்தி அன்றோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ நாக சிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் - குங்குமம் வைத்து பூஜை செய்வதன் மூலம் நாக தோஷம் நீங்கும். மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால், நாக தோஷம் (அ) காலசர்ப்ப தோஷம் எதுவானாலும் அவை நீங்கி உன்னதமான வாழ்க்கை அமையும்.