கதிர் ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச் சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து காய் சின மாகளிறு அன்னான் என் கைப்பற்றி தீவலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப் பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலஞ் செய்து மாமண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!