பெருமாள் பக்தனான மன்னர் பத்மாட்சன் காட்டிற்குச் சென்று தவத்தில் ஈடுபட்டார். காட்சியளித்த பெருமாள் விரும்பும் வரம் தருவதாக தெரிவித்தார். “எனக்கு லட்சுமி தாயார் மகளாக பிறக்க வேண்டும்” எனக் கேட்டார் மன்னர். பத்மாட்சனிடம் ஒரு மாதுளம்பழத்தைக் கொடுத்த பெருமாள், “உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்”என அருள்புரிந்தார். மன்னர் பெற்ற அந்த பழம் பெரிதாக வளர்ந்தது. வியப்படைந்த மன்னர் அதை பிளந்த போது, அதில் ஒருபுறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பதைக் கண்டார். தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்த குழந்தைக்கு ’பத்மை’ என பெயரிட்டார். இதன் அடிப்படையில் மாதுளை செடி இருக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பர். லட்சுமிக்கு பிடித்த மாதுளம்பழத்தை பூஜையில் பிரசாதமாக படைப்பர்.