பதிவு செய்த நாள்
27
செப்
2018
12:09
குரு பெயர்ச்சி காலத்தில் வழிபட வேண்டியது நவக்கிரக குருவையா, ஞான குருவையா?.. சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா? இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். ‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர். ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு குருவுக்கு உரிய பரிகாரத்தை பட்டமங்கலம் தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞான குருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:
குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம:
இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி, பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும். இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும். திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும், இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம். கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம். அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
வியாழக்கிழமைதான் என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.