1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் நடந்தது. குடும்பத்துடன் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். சென்னைக்கு வந்த பிறகு வேத அத்யயனத்தை யக்ஞமணி தீக்ஷிதரிடம் பூர்த்தி செய்தார். மேலும் ச்லோகங்களை உரை நடையாகச் சொல்லி வந்தவர் சங்கீதம் அறிந்த ரங்கராஜய்யர் என்ற நண்பர் சேர்க்கையால் ஸ்வரத்தோடு ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய ஆரம்பித்தார். 1961 செப்டம்பரில் இருந்து ஸ்வாமிகளின் மனைவி மிகவும் தேக அசவுக்கியத்துடன் இருந்தாள். என்ன வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. அப்பொழுது அவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந்திருந்தார்கள். ஸ்வாமிகளுக்கும் சரீர சிரமங்கள் இருந்தாலும் (கடுமையான வயித்து வலி) முடிந்தவரையில் பாராயணத்தையும் பூஜையும் விடாமல் செய்து கொண்டு ஆபீசுக்கும் போய்க்கொண்டிருந்தார். எனினும், டாக்டர், மருந்து செலவுகளும் மற்ற செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகவே கடன் அதிகமாகிக் கொண்டே வந்தது. முதல் தேதி அன்று வாங்கும் சம்பளம் கடனுக்காகவும், வட்டிக்காகவும் சரியாகப் போய்விடும் நிலை ஏற்பட்டதால் அம்மாத செலவிற்காக முதல் வாரத்திலேயே கடன் வாங்கும்படியாக இருந்தது.
இதற்கிடையில் 1957ல் ஸ்ரீமன்னார்குடி பிச்சு ச்ரவுதிகள் என்ற ஒருபெரியவர் அம்பாளின் உத்தரவின் பேரில் நம் ஸ்வாமிகளின் வீடு தேடி வந்து அம்பாள் மந்திரம் உபதேசம் செய்தார். அம்பாள், மன்னார்குடி ரவுதிகளுக்கு, கல்யாணராமன், 10, சிங்கராசாரி தெரு, திருவல்லிகேணி என்ற நம் ஸ்வாமிகளின் பெயரையும் விலாசத்தையும் ஸ்வப்னத்தில் தந்தருளியதாக பின்பு ச்ரவுதிகளே நம் ஸ்வாமிகளிடம் தெரிவித்துக் கொண்டார். மன்னார்குடி ச்ரவுதிகள் அம்பாளுக்கு பூஜை, நைவேத்யம், உத்ஸவம் செய்வதிலேயே தன் சொத்துகளைப் பெரும்பாலும் செலவிட்டார். மன்னார்குடி ச்ரவுதிகளின் குரு மதுரை குழந்தையானந்த ஸ்வாமிகள் என்ற சித்த புருஷர். பரம குரு கணேச பாபா என்கிற பெரியவர்.
இதற்குப் பிறகு ஒரு பெரியவர் மூலமாக ஸ்ரீமந் நாராயணீத்தில் ஒரு ச்லோகம் (5வது தசகம் கடைசி ச்லோகம்) உபதேசமாகக் கிடைத்தது. ஸ்வாமிகள் ஸ்ரீமன் நாõயணீத்தின் மீது கொண்டிருந்த பக்தியும் பற்றுதலும் அவருடன் நெருங்கிப் பழகிய அன்பர்களுக்கே தெரிந்த விஷயம். மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற முயற்சி இல்லாமலே நிறைய ஆவர்த்தி சொல்லிக் கொண்டு வந்ததில் இந்த க்ரந்தம் ஸ்வாமிகளுக்குக் கொஞ்ச நாட்களில் மனப்பாடம் ஆகிவிட்டது.
1965ல் ஒரு மஹானிடம் ராம நாம ஸுத்திரம் எடுத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணீயத்தை உச்சரித்துக் கொண்டு உஞ்சவ்ருத்தியாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் முதலிய இடங்களுக்குச் சென்று அக்ஷதை போட்டால் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மத்யானம் திரும்பி வந்துவிடுவார். ஸ்வாமிகள் உத்யோகத்தில் இருக்கும் வரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறு உஞ்சவ்ருத்திக்காக செல்வது வழக்கம். சில சமயம் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹத்திற்காகப் பழைய மாம்பலம், தி.நகர், கோடம்பாக்கம் முதலிய இடங்களுக்குச் செல்ல நேரும் பொழுது பாராயண பூர்த்தி தினத்தன்று அவப்ருத ஸ்நானத்திற்கு முன்பாக அந்தந்தப் பேட்டைகளிலேயே உஞ்சவ்ருத்திக்காகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1973 வரை தொடர்ந்த இந்தப் புனித ஜீவனம், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவாள் இவரிடம், தனியாகத் தெரிவித்த அபிப்ராயத்தின் பேரில் கைவிடப்பட்டது.
மேற்படி சூழ் நிலையில் ஸ்ரீஸ்வாமிகளுக்குப் பகவத் பஜனத்தை ஆபீசுக்குப் போய்க்கொண்டு பூரணமாகச் செய்ய முடியாது என்ற அபிப்ராயம் வ்ருத்தியாகிக் கொண்டே வந்தது. இதன் விளைவாக01/08/1966 முதல் சம்பளமில்லாத விடுப்பு எடுத்துக் கொண்டு பகவத் பஜனம் செய்ய ஆரம்பித்தார். 1966 லிருந்து 1968 வரை பிள்ளையார் கோயிலில் (ராமனாதன் தெரு, தி.நகர்) ஆத்மார்த்தமாக ஸ்ரீமன் நாராயணீய பாராயணமும், ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணமும் செய்து வந்தார்.