1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் வேதாத்யயனம், ஸ்ரீமத் பாகவத, ராமாயண பாராயணம், பகவன் நாம ஸங்கீர்த்தனம் முதலியவைகளையே நம்பி வாழ்ந்து வந்ததாகவும், தான் தான் முதலில் இங்கிலீஷ் படிப்பிற்குச் சேர்ந்ததாகவும், அதிலிருந்து தான் குடும்பத்தில் எல்லாவிதமான கஷ்டங்களும் வர ஆரம்பித்ததாகவும் தெரிவித்துக்கொண்டார். இந்த கஷ்ட நிவ்ருத்திக்கு மஹாபெரியவாளின் அனுக்ரஹம் வேண்டும் என்ற ப்ரார்த்தனையின் பேரில் மஹாபெரியவாள் இரண்டு கைகளையும் தூக்கி ‘முன்னோர்கள் செய்ததையே செய்து வா!’ என்று மூன்று முறை சொன்னார். இதை அனுசரித்து ஸ்வாமிகள் 11/12/1969ல் தனது தபால் ஆபீஸ் உத்யோகத்தை ராஜினாமா செய்தார். இதற்கிடையில் குடும்ப சிரமங்கள் அதிகரித்துக் கொண்டேயிருந்ததால் 1971ல் குருவாயூருக்குத் தனியாகச் சென்று ராதாஸஹாயனையே நம்பிக்கொண்டு ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் செய்தார்.
குடும்ப நிலைமையின் காரணமாக வீட்டில் நிம்மதியாகப் பாராயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு லாட்ஜில் (நியோ இந்திர பவன், 50 பெரிய தெரு, திருவல்லிகேணி). ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு 1976 லிருந்து 1978 வரை ஸ்ரீமத் பாகவத மூலபாராயணம் செய்து வந்தார். இவ்வாறு உடம்பை வருத்திக் கொண்டு தூக்கத்தையும் குறைத்துக் கொண்டு ஸ்ரீமத் பாகவத பாராயணத்துடன் ஸ்ரீமத் சுந்தர காண்ட முழு பாராயணமும், ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணமும் செய்து வந்தார்.