ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை காலை 6.30க்கு மணிக்கு பூரட்டாதி நக்ஷத்திரத்தில் நிகழ்ந்தது. ஸ்வாமிகளின் தந்தையார் வேங்கடராம சாஸ்திரிகள், தாயார் ஸ்ரீமதி பாலாம்பாள்.
வேங்கடராம சாஸ்திரிகள் ஸ்வாமிகளுடைய பிதாமஹர் (தந்தை வழி பாட்டனார்.) க்ருஷ்ணய்யரின் தம்பி ராமநாத சாஸ்திரிகளிடம் வளர்ந்தார். ராமநாத சாஸ்திரிகள், தனது 16 வயது முதல் 64 வயது வரை, தம்பூராவுடன் ஸ்ரீமத் நாராயண சங்கீத உபன்யாஸம் செய்து வந்தார். இவர் 1939ல் காலகதி அடைந்தார். இவருடைய தர்மபத்தினி, நம் ஸ்வாமிகளை குழந்தைப் பருவத்தில் தாயன்புடனும் அக்கறையுடனும் வளர்த்தாள். நம் ஸ்வாமிகளுடைய இந்த சின்னப்பாட்டி மிகவும் விவேகி. நற்குணங்கள் நிரம்பியிருந்தவள். இவளுடைய உபதேசங்களும், நன்நெறி சார்ந்த நடத்தையும் நம் ஸ்வாமிகளிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சுருங்கச் சொன்னால் ஸ்வாமிகளின் சின்னப்பாட்டி அவருடைய முதல் வழிகாட்டியாக அமைந்தாள்.
ஸ்வாமிகளின் பிதாமஹர் தன்னுடைய மாமா ஸ்வாமி தீக்ஷிதரின் அபிமான புத்திரராக ஆங்கரைக்கு வந்தார். இந்த ஸ்வாமி தீக்ஷிதர் ஸன்யாசம் வாங்கிக் கொண்டு திம்மாச்சிபுரத்தில் (லாலாபேட்டை அருகில்) சித்தியடைந்தார். இவருக்கு யதி ஸம்ஸ்காரம் நடந்தது.
ஸ்வாமிகளின் தகப்பனார் வேங்கடராம சாஸ்திரிகள் வேத அத்யயனம் செய்து, ஸ்ரீமத் ராமாயணத்தையும், ஸ்ரீமத் பாகவதத்தையும் க்ரமமாக பாராயணம் செய்து வந்தார். மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் ப்ரவசனம் செய்யும்பொழுது இவர் நிறைய இடங்களில் மூல பாராயணம் செய்திருக்கிறார். வேங்கடராம சாஸ்திரிகள் ஆசார சீலர், நித்யானுஷ்டானங்களை ஒழுங்காகவும் கண்டிப்பாகவும் செய்வார். தினமும் வேத பாராயணம் செய்வார். சாஸ்திரத்திற்கு புறம்பில்லாத வகையில் சில உபாத்யாயங்களை திருச்சியில் வைத்துக் கொண்டு எளிய ஜீவனம் நடத்தி வந்தார்.
ஜீவனத்திற்கு மிகவும் சிரமப்பட்ட போதிலும் தனத்தை இப்படித்தான் சம்பாதிப்பது என்று பிடிவாதமான கொள்கை வைத்திருந்தார். அதாவது சாஸ்திரத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்தோ, தவறான வழியில் பணமீட்டும் எவரிடமும் உபாத்யாயமோ வைத்துக் கொள்வதில்லை என்ற தீர்மானத்துடன் கடைசி வரையில் இருந்தார். ‘என் தகப்பனார் இரண்டு ரூபாய்க்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தபொழுது அவருக்கு ஐநூறு பவுன் காசுகளும் ஒரு சிறிய சொர்ணத்தினாலான ப்ரதிமையும் ஒரு ப்ராயச்சித்தத்தின் பொருட்டு ஸ்வீகரிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. இந்த வாய்ப்பை என் தகப்பனாருக்குப் பெற்றுக் கொடுத்தவர் தானத்தை வாங்கிக்கொள்ளும்படியும் பிறகு அகமர்ஷண சூக்தத்தினால் (ஸ்நானம் செய்யும்போது சொல்லும் மந்திரம்) ஸுத்தி செய்து கொள்ளலாம் என்று யோசனை கூறினார். அதற்கு என் பிதா தான் அந்த தானத்தை வாங்கினால் ஸ்நானம் செய்யும் எண்ணமே தன் மதில் எழாது என்று கூறித் தீர்மானமாக மறுத்துவிட்டார். ‘புலிக்கு பிறந்தது பூனையாகாது’ என்ற வசனத்திற்கேற்ப நம் ஸ்வாமிகளும் தவறான பணத்தை உதாஸீனம் செய்வதில் தன் பிதாவை முழுவதுமாக அனுசரித்தார்.
ஸ்வாமிகளை இளம் வயதில் வேத அத்யயனத்தில் சேர்த்தனர். எனினும் 15 வயது வரையில் மிகவும் உடம்பு படுத்தியதால், இங்கிலீஷ் படிப்பிற்கு போய் 1948ல் எஸ்.எஸ்.எல்.சி. தேறினார். ஸ்வாமிகளுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். மூன்று வயதில் தாயார் காலமாகிவிட்டபடியால் மேற்கண்டபடி ஸ்வாமிகள் தன் சின்னப்பாட்டியிடமே முழுவதும் வளர்ந்தார்.
ஸ்வாமிகள் தன் தகப்பனாரிடமிருந்து மிகவும் சிறிய வயதிலேயே ஸமஸ்க்ருதமும், ஸ்ரீமத் ராமாயண பாகவத பாராயணங்களையும் ஸ்வீகரித்துக் கொண்டார். சிறிய வயதிலேயே தன் தகப்பனார் மேற்கொண்ட பாகவத ஸப்தாஹங்களில் அவருக்கு முடியாத போது, ஸ்வாமிகள் மூல பாராயணம் செய்திருக்கிறார். மேலும், தகப்பனார் மூலமாக ஸ்வாமிகளுக்கு போலகம் ராம சாஸ்திரிகள் முதலிய மஹான்களின் சேர்க்கையும் அவர்களின் உபன்யாஸத்தை அடிக்கடி கேட்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. இவைகள் அனைத்தும் ஸ்வாமிகளின் ஸமஸ்க்ருத பாஷா ஞானத்திற்கு மிகவும் உதவி புரிந்தன. மேலும் ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீஸ்வாமிகளுக்கு வெகு சீக்கிரத்தில் அத்துப்படியாகிவிட்டன.