குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.