அனைத்துக் கோயில்களிலும் கருவறைக்கு முன்பாக துவார பாலகர்கள் அருள்பாலிப்பார்கள். "பாலனம் என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது "செக்யூரிட்டி என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், கோயிலின் சாந்நித்தியத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார பாலகர்கள். துவார பாலகர்களின அருள் இருந்தால் தான் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய முன்வினைகள் என்னென்ன, நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து, முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்து, நம்மைப் பக்குவப்படுத்தி, நிறைவாக இறைவனை அடைவதற்கு உரிய நிலையை நாம் பெறச் செய்யும் புனித இடம்தான் கோயில். எப்படி ஒரு சி.சி.டி. கேமரா மூலம் அது பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கக்கூடிய காரியங்கள் பதிவு செய்யப் படுகின்றனவோ, அதேபோன்று கோயிலில் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்வுகளும், துவாரபாலகர்களினால் கண்காணிக்கப்பட்டு, இறைவனிடம் தெரிவிக்கப்படுகின்றன.