பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
05:04
ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காமலிருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரையும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.
ராம நாம மகிமை: ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்தபோது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான். அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்!
ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீராமநவமி உற்சவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, ஜனன உற்சவம் மற்றொன்று கர்ப்ப உற்சவம்.