காட்டில் நடத்தவிருந்த யாகத்துக்கு இடையூறு செய்யும் அசுரர்களை அடக்க விரும்பினார் ராஜரிஷி விஸ்வாமித்திரர். அதற்காக தசரதரின் மகன்களான ராமர், லட்சுமணரை தன்னுடன் அழைத்துச் சென்றார். இரவானதும் ஓரிடத்தில் விஸ்வாமித்திரர் தூங்கினார். அவர்களும் முனிவருக்கு அருகில் தூங்கினர். காலையில் கண் விழித்த விஸ்வாமித்திரர். அரண்மனையில் தூங்கும் தசரத குமாரர்கள் வெற்றுத் தரையில் தூங்குவது கண்டு நெகிழ்ந்தார். அவர்கள் கடமையாற்ற அழைக்க விரும்பி, ’கவுசல்யா சுப்ரஜா ராமா...’ என அழைத்தார். இந்த நிகழ்வின் மூலம் முதன் முதலில் சுப்ரபாதம் பாடிய பெருமை விஸ்வாமித்திரரைச் சேரும்.