பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
03:04
மதுரையில் 48 ஆண்டுகள் அந்நிய மதத்தவரான டில்லி சுல்தானியர்கள் அரசு நடத்தினார்கள் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அதனால், தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே, இங்குள்ள கோயில் சிலைகளையும் அரிய பொக்கிஷங்களையும் பாதுகாப்புக்காக தெற்கே நாஞ்சில் நாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.
அப்படிச் செல்ல முடியாத சிலைகள் எல்லாம் அந்தந்த கோயிலைச் சுற்றியுள்ள பூமியில் புதைக்கப்பட்டன. அச்சிலைகள்தான் நமக்கு அவ்வப்போது மண்ணிலிருந்து கிடைத்து வருகின்றன. நாஞ்சில் நாடு போன சிலைகளில் மதுரை மீனாட்சி உற்சவர் சிலையும் ஒன்று. பகைவர்கள் மதுரையை அடைவதற்கு முன்பே, திருக்கோயிலின் மூலவர் கருவறையை மூடி, அதைச் சுற்றிச் சுவர் எழுப்பி, கிட்டத்தட்ட
கோயில் முழுவதும் வெறுமையாக்கப்பட்டது.
"மதுரை ஸ்தானீகா வரலாறு என்ற நூல் கூறுவதைப் பாருங்கள். ""பகைவர்கள் படை எடுத்து வருகிறார்கள் என்பதை ஒற்றர் வாயிலாகக் கேள்விப்பட்டு அப்போது ஆட்சிபுரிந்த பராக்கிரம பாண்டியன் பயந்து போய் காளையார் கோயில் போய் விட்டார். ஸ்தானீகர்கள் மூலவருக்கு கிளிக் கூண்டு பண்ணுவித்து, அர்த்த மண்டபத்திலே வேறொரு லிங்கத்தை பிரதிஷ்டை பண்ணுவித்து விமானத்தில் மீனாட்சியை அஷ்டபந்தனம் பண்ணுவித்து, பரிவார விக்ரகங்கள் அனைத்தையும் பூபதனம் பண்ணுவித்து, மீனாட்சி உட்பட சொர்ண மூர்த்திகளை எடுத்துக்கொண்டு நாஞ்சில் நாட்டு
கிலுகிலுப்பைக் காடு போய்ச் சேர்ந்தனர்.
கி.பி. 1268-ல் பட்டத்திற்கு வந்த மாறவர்ம குலசேகர பாண்டியன் நல்லாட்சி புரிந்து கி.பி. 1310 காலகட்டத்தில் பொன்னும் மணியுமாக அரண்மனைக் கருவூலத்தை நிரப்பி வைத்திருந்தான். மீனாட்சியம்மன் கோயிலை புதுப்புதுத் திருப்பணிகளால் சிறப்பித்தான். அவனது இருமனைவியரின் புதல்வர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இருவரிடையே அரியணைப் போட்டி கடுமையாக இருந்தது. பரம்பரை சம்பிரதாயப்படி வீரபாண்டியனுக்கு முடி சூட்டிய தந்தையை கொலையே செய்தான் இன்னொரு மகனாகிய சுந்தரபாண்டியன். கி.பி. 1311 இந்தக் கால கட்டத்திலேதான் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி "மாலிக்காபூர் தென்னாட்டுக்குள் பெரும் படையோடு நுழைந்தான். பங்காளியான வீரபாண்டியனை வீழ்த்துவதற்காக, தென்னாட்டிலே பகற்கொள்ளையிட வந்த மாலிக்காபூரின் உதவி வேண்டி அவன் காலடியில் போய் விழுந்தான். பாண்டியப் "பதரான சுந்தர பாண்டியன்.
மதியிழந்த சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய இருவரின் சிந்தனையற்ற மடத்தனத்தால் பாண்டிய நாட்டின் விதியை, மதுரைக் கோயிலின் கதியை, பங்காளிக் காய்ச்சலால், பதவி வெறியால், அண்ணன் தம்பியரின் அறியாமையால் அந்நியப் படைகளால் மதுரைச் சீமை கடுமையாக பாதிக்கப்பட்டது. அது மட்டுமா? தமிழகத்தின் பெரும்பகுதிகள் புகழ்மிகு கோயில்கள், அதன் சொத்துகள், உற்சவ மூர்த்திகள், அதிசயமான கலையெழில் கொஞ்சிய கட்டடச் சிற்ப அற்புதங்கள் அனைத்தும் நாசமாயின. வீரபாண்டியனைத் துரத்திக்கொண்டு மாலிக்காபூர் சிதம்பரம் வந்தான். பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்தான். கோயில் சொத்துக்களைக் கொள்ளையிட்டான். கோயிலுக்குத் தீவைத்தான். அடுத்து ஸ்ரீரங்கத்துக்குத் தாவினான். ரங்கநாதரின் பெரிய கோயிலை இடித்துப் பாழாக்கினான். உடமைகளை சூறையாடினான்.
அடுத்து மதுரை மாநகரைத் தாக்கினான். மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தீயிட்டான். பாண்டிய நாடே பற்றி எரிந்தது. கோயில் பகுதிகள் இடிந்து விழுந்தன. மக்கள் படுகொலைக்குள்ளாயினர். கோயில்களில் ஆராதனைகள் புறக்கணிக்கப்பட்டன. உருவ வழிபாடுகள் தடை செய்யப்பட்டது. மதுரையில் இருந்த கோயில் பகுதிகள் அனைத்தும் மாலிக்காபூராலும் தொடர்ந்து வந்த அவனது நிழல்களாலும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. பல மாதங்கள் கொள்ளையில் ஈடுபட்ட மாலிக்காபூர் பாண்டிய நாட்டிலிருந்து 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்குதங்கம், ஆயிரக்கணக்கான பெட்டிகளில் முத்து, ரத்தினங்களோடு கி.பி. 1311-ல் டெல்லி திரும்பினான்! என்று மதுரை தலவரலாறு குறிப்பிடுகிறது. மலைமலையாக டெல்லியிலே வந்து குவிந்த தமிழக கோயில் கலைச்செல்வங்களைக் கண்ட டெல்லி சுல்தான்கள் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டு காலம் அலை அலையான படையெடுப்பு களால் தமிழகத்தைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். காடுகளும், மலைகளும் வளமான பூமியும் செல்வம் செழிக்கும் நகரங்களும் அவர்களுக்குப் பேராசையை ஏற்படுத்தின. அதன் விளைவாக மதுரைப் பாண்டிய நாடு சுல்தான்களின் முழு உடைமையானது. அவர்கள் மதுரையை 48 ஆண்டு ஆட்சி புரிந்தனர். 8 சுல்தான்கள் ஆட்சியாளர்களாக இருந்தனர்.
விஜய நகர சாம்ராஜ்யம் உதயமானது. சுல்தான்களின் பேராசைச் சூறாவளியால் சின்னாபின்னப்பட்டுச் சிதைந்த மதுரையை, விஜய நகரப் பேரரசின் வாரிசான இரண்டாம் கம்பண உடையார் கி.பி. 1371-ல் பெரும்படையோடு வந்து மீட்டார். மதுரையைக் கைப்பற்றிய பிறகு அவரும் அவரது மனைவி கங்காதேவியும் மீனாட்சி கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே மீனாட்சி அம்மனின் கருவறை மூடப்பட்டு, அதன் வாயிலில் சுவர் எழுப்பி இருந்தது. மதுரையிலிருந்து மீனாட்சி கிளம்பிய போது மூடப்பட்ட அந்தச் சுவர் இளவரசர் கம்பண உடையார் முன்னால் உடைக்கப்பட்டதும் அவரும் மற்றவர்களும் கருவறைக்குள் சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த அதிசயத்தைப் பார்த்து கம்பணர் வெல வெலத்துப் போனார். அவரது மனைவியும் மற்ற பிரதானிகளும் வியந்துபோய் மெய்மறந்து நின்றார்கள்.
ஆம்! அங்கே 48 ஆண்டுகளாக (கி.பி. 1323 -1371) மூடிக்கிடந்த மதுரை கோயில் கர்ப்பகிரகத்தை திறந்த போது, நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் அர்ச்சித்த பூஜாமலர்கள் வாடாமலும், அங்கு ஏற்றிய தீபம் எரிந்த நிலையில் அப்படியே சுடர்விட்டு மின்னிய அற்புதத்தையும் கண்டு கம்பண உடையார் பக்திப் பரவசம் மேலிட உணர்ச்சிவசப்பட்டு மீனாட்சி அன்னையின் அருளாற்றலைக் கண்டு கண்ணீர் பெருக்கெடுக்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அன்னை மீனாட்சியின் ஆத்மார்த்த பக்தரானார்.
""அன்னையே ! உன் திருக்கோயிலைப் புதிதாக்குகிறேன். உன் பழைய மாண்பினைக் கொண்டு வருகிறேன். மதுரையம் பதியைப் புனிதத்தலமாக மாற்றுகிறேன். பார் போற்றும் வண்ணம் அனைத்துத் திருவிழாக்களையும் சீரோடும் சிறப்போடும் நடைபெற ஆவன செய்கிறேன்! என்று கம்பண உடையார் அன்னையின் முன் சபதம் செய்தார்.
உடனே நாஞ்சில் நாட்டு கிலுகிலுப்பைக் காட்டில் மறைந்து கிடந்த மீனாட்சி உற்சவ மூர்த்தத்தையும் மற்றுமுள்ள சொர்ண மூர்த்திகளையும் எடுத்துக் கொண்டு வந்து கோயில் முழுவதையும் செப்பனிட்டு கி.பி. 1372-ம் ஆண்டு கால கட்டத்திலேயே மதுரை ஆலவாயப்பனின் பேராலயத்துக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைத்தார். அன்றிலிருந்து தொடங்கியதுதான் விஜயநகர அரசின் கோயில் திருப்பணிகள். வழிவழியாக வந்த அவர்களது அரசாட்சி காலத்தில், கோயில் தற்காலத்தில் நாம் காணும் அளவுக்குப் பெரிதாக்கப்பட்டது. நிறைய நிலபுலன்களும், கிராமங்களும் மீனாட்சி கோயிலுக்கு வருமானமாக எழுதி வைக்கப்பட்டன. கோயில் சிற்பங்களும், தூண்களும், மண்டபங்களும் நிறைந்து ஓர் அதிசயக் கலைப் பொக்கிஷமாக மாறியது மதுரையம்பதி. இன்று நாம் காணும் சிற்பங்கள், சிலைகள் அதன் அழகு பொலிவு எல்லாம் விஜயநகர அரசு தமது கைதேர்ந்த சிற்பிகள் மூலம் செய்து வைத்த மகத்தான பணியாகும். மதுரையின் மாண்பும் நடைபெறும் திருவிழாக்களும் உலகையே கவர்ந்திழுக்கும் ஒரு மாபெரும் கலை, கலாசார, பாரம் பரியப் பண்பாட்டின் உறைவிடமாகத் திகழ்கிறது.