பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
02:06
கும்பகோணம் நகரத்துக்குத் தென்மேற்கே கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புறநகராக விளங்குவது தாராசுரம். சோழப் பேரரசர்களின் கோநகரமான பழையாறை என்ற தலைநகரத்தின் ஒரு பகுதியாக ராசராசபுரம் விளங்கியது. இந்த ராசராசபுரம் நாளடைவில் ராராபுரமாக மருவி. பின்பு தாராசுரம் என அழைக்கப்படலாயிற்று. சோழப் பெருமன்னன் இரண்டாம் ராசராசன் (கி.பி. 1146 - 1163) இந்த ஊரை நிர்மாணம் செய்து, அங்கு ராசராசேச்சரம் என்ற பெயரில் பெரிய சிவன்கோயில் ஒன்றை எடுப்பித்தான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணியில் சிறப்பிக்கப்படும் இக்கோயில், பின்னாளில் ஐராவதீஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
பெரியபுராணம் சொற்களால் சிறப்பித்த அடியார்களின் வரலாற்றை கற்களால் சிறப்பிக்கும் வகையில், இந்தக் சிற்ப அற்புதங்களாக அமைத்திருப்பது சிறப்பு. மற்றுமொரு சிறப்பு -தேர் வடிவில் திகழும் முகமண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபம். இதன் கிழக்குச் சுவரில் அமைந்த கோஷ்டம் ஒன்றில் திகழ்கிறது. இந்த அர்த்தநாரியின் சூரியவடிவம், கோஷ்டத்துக்கு மேல், சோழர் கால செந்தூர எழுத்துக்களில், "அர்த்தநாரி சூரியன் என எழுதப்பட்டுள்ளது. தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் எனும் நான்கு முகங்களுடன், உடலில் ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தரும் இந்த அர்த்தநாரி சிவசூரிய சிற்பம், உலகில் வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத அற்புதம் என்றே சொல்லலாம்.