பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
02:06
பாரதமெங்கும் வீரபத்திரருக்கான கோயில்கள் பலவுண்டு. தமிழகத்தின் திருப்பறியலூர், அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று; தற்போது, பரசலூர் என்று வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை திருக்கடவூர் சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறை மூர்த்தி வீரட்டேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
கோயிலின் மகா மண்டப வடக்கில் வீரபத்திரர் சன்னிதி அமைந்துள்ளது. மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணி ஏந்தியபடி பக்தர்களுக்கு அபயம் அளித்தருளும் இங்குள்ள வீரபத்திரரை வணங்கினால், சகல பயமும் நீங்கி இன்ப வாழ்வைப் பெறுவார்கள்.
வீரபத்ர தலங்களில் குறிப்பிடத்தக்கது அனுமந்தபுரம். சென்னை -திருச்சி சாலையில், செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் அருகில் தென்கிழக்கில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது அனுமந்தபுரம். அரன் மைந்தனான வீரபத்திரர் அருளும் ஊர் என்பதால் அரன்மைந்தபுரம்
என்பது பெயர். இது மருவி அனுமந்தபுரமானது. இங்கு, வீரபத்திரர் காலையில் குழந்தைப் பொலிவுடனும், உச்சி வேளையில் வாலிபத் தோற்றத்தோடும், மாலையில் வயோதிகத் தோற்றத்தோடும் காட்சியளிப்பது சிறப்பானது.
மேல்மருவத்தூருக்கு தெற்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ள முருகன் தலம் பெரும்பேர் கண்டிகை, இவ்வூரின் மையத்தில் வீரபத்திரர் கோயில் ஒன்று உண்டு. கருவறையில் வீரபத்திரரும், அவருக்கு வடமேற்கு முனையில் தனிச்சன்னிதியில் பத்ரகாளியும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள சக்ரக்கிணறு தீர்த்தம் விசேஷமானது.
இந்தத் தலங்கள் மட்டுமின்றி.... மயிலாப்பூர், திருவண்ணாமலை, திருக்கடவூர், செம்பியமங்கலம், தாராசுரம், கும்பகோணம் ஆகிய ஊர்களிலும் வீரபத்திரர் கோயில்கள் அமைந்துள்ளன. தர்மத்தின்வழி நடக்கும் அன்பர்களின் குலம் காக்கும் தெய்வம் வீரபத்திரர். எனவே அச்சம் எழும்போதெல்லாம் அவர் தாள் வணங்கி, அவரருளையும் வரத்தையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம்!