பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
04:06
பண்டைக் காலத்தில் தமிழகமெங்கும் பலராமர் வழிபாடு பரவலாக இருந்ததாக சங்க கால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பலராமர், விஷ்ணுவின் அம்சமாய் வசுதேவருக்கும் ரோகிணிக்கும் பிறந்தவர். இவரை ஆதிசேஷன் அம்சம் எனவும் பரமபதநாதரது வெண்ணிறமான அம்சம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
அலாயுதன், அச்சுதன் நீலாம்பரன், குண்டலன், முன்னோன், வெள்ளை, வெள்ளையன், பனந்துசன், பலதேவன் என்று பல பெயர் களையுடையவன் என்று பழம்பெரும் இலக்கண நூலான "பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. "ஏக குண்டலன் என்பது பலராமனுடைய பெயர்களில் ஒன்று என்றும் "நிகண்டுகள் கூறுகின்றன. "ஒரு குண்டலன் என்று முல்லைக்கலியும், "ஒரு குழை ஒருவன் என்று பாலைக்கலியும், "ஒரு குழையவை என்று பரிபாடலும் கூறுகின்றன. "யமுனை நதியால் பலராமனுக்கு இந்த ஒரு குண்டலம் அளிக்கப்பட்டது என்கிறார். "நச்சினார்க்கினியர் என்று சங்ககாலப் புலவர்.
பலராமன் வெண்மை நிறமுடையவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனவே அக்காலத் தமிழர்களும் வெண்மை நிறமுடைய பலராமனை "வாலியோன் என்று அழைத்தனர். முல்லைக்கலி, சீவகசிந்தாமணி ஆகிய பழம்பெரும் நூல்கள் பலராமனை "பால்நிறவண்ணன் என்று குறிப்பிடுகின்றன. நற்றிணை, புறநானூறு, கலித்தொகை, இன்னாநாற்பது, தினை மாலை, நூற்றைம்பது கார் நாற்பது முதலிய நூல்கள் பலராமனை வழிபட்டு வந்ததை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் வாயிலாக பூம்புகாரில் உள்ள கோயில்களைப் பற்றிக் கூறும்போது, சிவன் கோயில் முதலாவதாகவும், முருகன் கோயில் இரண்டாவதாகவும், மூன்றாவதாக பலதேவன் கோயில் இருந்ததாகக் கூறுகிறார்.
பனைக்கொடியையும் கலப்பையையும் ஆயுதமாகக் கொண்ட பலராமனுக்கு மதுரையில் கோயில் இருந்ததை "மேழிவனுயர்த்த வெள்ளை நகரமும் என்ற வரிகள் மூலம் இளங்கோவடிகள் எடுத்துக்காட்டுகிறார். மேலும் அவர் சிவனுக்குரிய கோயிலை முதலிலும், அதையடுத்து திருமாலுக்குரிய கோயிலையும், மூன்றாவதாக பலதேவன் கோயிலையும் குறிப்பிடுகின்றார். பரிபாடலில் இளம்பெருவழுதியார் என்று புலவர் திருமாலிருஞ் சோலையில் கண்ணன், பலராமன் ஆகிய இருவருக்கும் கோயில்கள் இருந்தன என்று கூறுகிறார்.
சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயில் போன்ற மிகப் பழமையான கோயில்களில் பலராமருக்கு சிற்பங்களும் சிலைகளும் உள்ளன. மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில் கண்ணன் கோவர்த்தனகிரியைக் கையில் ஏந்தி குடையாய்ப் பிடித்திருக்கும் சிற்பங்களில் பலராமன் சிற்பமும் இடம் பெற்றுள்ளது. ஆதியில் பலராமனைத் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்றும், இன்றும் தமிழ்மக்கள் பலராமன், பலதேவன், வெள்ளை, வெள்ளையன், வெள்ளைச்சாமி என தம் மக்களைப் பெயரிட்டு அழைப்பதைக் காணலாம். இது பலராமர் வழிபாட்டின் தாக்கமே என்கின்றனர் ஆய்வாளர்கள். மகாபாரதப் போர் ஏற்படாமல் தடுக்க பாண்டவர் பக்கமும், கவுரவர் பக்கமும் பலமுறை சமாதானத் தூதராகச் சென்ற பலராமரை யாரும் பொருட்படுத்தவில்லை. அவரது நல்லுரைகளை யாரும் கேட்கவில்லை. இதனால் மனம் வெறுத்துப் போய் பலராமர் போரில் கலந்து கொள்ளாமல் தீர்த்தயாத்திரை புரிய பாரதமெங்கும் சுற்றினார். தமிழகம் வந்த அவர் பல புண்ணியத்தலங்களை தரிசித்தும், புனித நீராடியும், வேதியர்களுக்கு பசுக்களை தானமாக வழங்கியதையும் ஸ்ரீமத் பாகவதம் அழகாக எடுத்துக் கூறுகிறது. பலராமருக்கென்று தனி வரலாறு இல்லை. கண்ணனின் தமையனாராக இருந்த அவர், கண்ணன் வரலாற்றோடே இணைந்திருந்தார். அதனால் பலராமன் வழிபாடு தமிழகத்தில் மெல்ல மெல்ல மறைந்து கண்ணன் வழிபாடு மட்டும் இன்றும் பரவலாக இருக்கின்றது.