குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே பணிகளைத் தொடங்குவர். குலதெய்வம் என்பது தாய், தந்தையைப் போல, நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகும். சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவர். சிலருக்கு குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் சோதனைகள் ஏற்படும் போது தெய்வ குற்றமாக இருக்குமோ என வருந்துவதுண்டு. இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபட, அகத்தியர் பூஜித்த வனதுர்க்கை கோயில் கதிராமங்கலத்தில் உள்ளது. கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3கி.மீ.,’கதிர் வேய்ந்த மங்கலம்’ என்று கவிச்சக்கர வர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். பெயருக்கேற்ப கதிரவனின் கதிர்கள், அம்பிகையின் மீது படுவதால் இந்த துர்கைக்கு’ஆகாச துர்கை’ என்றும் பெயருண்டு. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்கையை வழிபடுவது சிறப்பு.