பதிவு செய்த நாள்
30
மார்
2012
05:03
அரச பதவியை விட ஆன்மிகப்பதவியை மேலாக மதித்த இளவரசன் ஒருவர் தான் சிதம்பரம் நடராஜர் கோயிலை எழுப்பியவர் என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா! ஆம்..அவரது பெயர் இரண்யவர்மன். கவுடதேசத்தை ஐந்தாம் மநு ஆட்சி செய்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு சிங்கவர்மர் என்ற மகன் பிறந்தார். இளையவளுக்கு வேதவர்மர், சுமதிவர்மர் என்ற பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் அனைவருமே திறமை சாலிகள். கலைகள் பல கற்று சிறப்புற்று விளங்கினர். ஐந்தாம் மநுவின் ஆட்சியில் தர்மம் தழைத்தது. சிங்கவர்மருக்கு பட்டம் சூட்டும் வயது வந்ததும், அதற்குரிய ஏற்பாடுகளை ஐந்தாம் மநு ஏற்பாடு செய்தார். ஆனால், தன் உடலில் இருந்த குறை ஒன்றைச் சுட்டிக் காட்டிய சிங்கவர்மர், தனக்கு அரசபதவி வேண்டாம் என சொல்லிவிட்டு, ஆன்மிகவாழ்வில் ஈடுபடுவதாகக் கூறி காட்டுக்குப் போய் விட்டார். பெற்றவர்களுக்கு வருத்தம் இருந்தாலும், வேறு வழியின்றி அவரை அனுப்பி வைத்தனர். அவர் காசி சென்று கங்கையில் நீராடிய பிறகு, காளஹஸ்தி வந்தார்.
காளத்திநாதரை அவர் வழிபட்டார். அப்போது வேடர் தலைவன் ஒருவன் வந்தான். அவனிடம், வேடனே! இந்தக் காட்டைப் பற்றிய விபரங்களைச் சொல்லேன், என்றார். ஐயா! இந்த காட்டில் நடக்கும் அதிசயங்களை சொல்கிறேன், கேளுங்கள். இங்குள்ள ஒரு மரத்தின் அடியில் மிருகமோ, மனிதரோ யார் சென்றாலும், காணாமல் போய் விடுவார்கள். ஒரு மரத்தின் நிழல் பூமியில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே படும். சூரியனின் கிரணங்களுக்கு ஏற்ப நிழல் மாறவே மாறாது. ஒரு குளத்து நீர் விஷமுள்ளது. இன்னொன்றோ உடலுக்கு பலமளிக்கக் கூடியது. ஒரு மாமரத்தின் கீழ் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதை ஒரு பச்சை நிறப்பெண் (பார்வதிதேவி) தினமும் பூஜித்து வருகிறாள்,என்றதும், அவனை நோக்கி கைநீட்டி, பேச்சை நிறுத்துமாறு சொன்னார் சிங்கவர்மர்.நாமாக இருந்தால், வேடன் சொன்ன அதிசய இடங்களை பார்வையிட கிள்பியிருப்போம். ஆனால், உலகப்பற்றில்லாத சிங்கவர்மர், வேடனே! மாமரத்தின் அடியிலுள்ள லிங்கம் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச்செல், என்றார். வேடன் அவரை அழைத்துச் சென்று லிங்கத்தைக் காட்டினான். சிங்கவர்மர் அதை பணிவுடன் வணங்கினார். அங்கிருந்து தெற்குநோக்கி வேடனுடன் பயணத்தைத் தொடர்ந்தார். ஓரிடத்தில் புலிக்காலுடன் முனிவர் ஒருவர் தவத்தில் இருப்பதைக் கண்டு, அவரே வியாக்ரபாதர் என்று அறிந்தார்.
அரசாங்கம் வேண்டாமென்று ஆன்மிகத்தில் புகுந்த மனபக்குவமிக்க சிங்கவர்மரை, வியாக்ரபாதர் வரவேற்றார். அவர் வந்து சேர்ந்த இடம் சிதம்பரம் எனப்படும் தில்லையம்பலம். அங்கே நடராஜப்பெருமான் திருநடனமிடும் காட்சியைத் தரிசிக்கச் செய்தார் வியாக்ரபாதர். மிகப்பெரிய பாக்கியம் பெற்ற சிங்கவர்மர் அங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தார். அதன் விளைவாக தங்க நிறம் பெற்றார். அன்று முதல் சிங்கவர்மர் என்ற பெயர் இரண்யவர்மர் என்றாயிற்று. இரண்யம் என்றால் தங்கம். இந்த அதிசயம் கண்ட வியாக்ரபாதர், இரண்யவர்மனை தன் மகனாக ஏற்று, தன் மனைவியிடம் அழைத்துச் சென்று, இவன் உன் மகன் என்று கூறினார். அந்த அம்மையார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்த சமயத்தில் ஐந்தாம் மநு மன்னர் இறந்து போன செய்தியும், எப்படியாவது தன் மூத்த மகனை அழைத்து வந்து பட்டம் சூட்ட வேண்டும் என்ற அவரது இறுதி ஆசையையும் வசிஷ்டர் மூலமாக வியாக்ரபாதர் அறிந்தார். இரண்யவர்மனை நாடு சென்று பதவியேற்கும்படிவற்புறுத்தினார். அப்போது, நடராஜரும் அசரீரியாக இதுபற்றி உத்தரவிடவே, இரண்யவர்மர் உடனடியாக நாடு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். சிறிதுகாலம் அரசாட்சி செய்த பின், தம்பிகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, பொன் பொருளுடன் சிதம்பரம் வந்தார். கோபுரங்கள், மண்டபம் கட்டி ஒரு ஊரையும் உருவாக்கினார். சிதம்பரம் நடராஜருக்கு கோயில் எழ காரணமானவர் இரண்யவர்மர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.