பதிவு செய்த நாள்
30
மார்
2012
05:03
ஆஞ்சநேயரின் மகன் மகரத்வஜன்: பிரம்மச்சரியம் சற்றும் பிசகாத ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் உண்டு. மனைவி கூட உண்டு. ராம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவிற்கு உதவுவதற்காக, மகேஸ்வரனின் அம்சமாகப் பிறந்தவர்தான், வாயு புத்திரனான அனுமன். கேசரி - அஞ்சனை தம்பதியருக்கு வாயுபகவான் வரம்தர, அவர்களது மகனாக சிவனின் அம்சமாகப் பிறந்தார் தான் ஆஞ்சநேயர். ராமராவண யுத்தத்தின்போது, ராவணனுக்கு உதவ வந்தவன், அவனது உற்ற நண்பனான மயில்ராவணன். மாயைகளில் வல்லவனான அவன், விபீஷணன் போல் வடிவமெடுத்து, ராம - லக்ஷ்மணரை தன் இருப்பிடமான பாதாள உலகிற்கு கடத்திக் கொண்டு போனான். ராம-லக்ஷ்மணரை மீட்டுக் கொண்டு வருவதற்காக பாதாள உலகிற்குப் போனார் அனுமன். மயில் ராவணனின் அரண்மனையைக் கண்டுபிடித்து, அதனுள் நுழைய முயன்றார். அப்போது அவரைத் தடுத்தான் ஓர் இளைஞன். தன்னை வென்றாலே அரண்மனைக்குள் நுழைய முடியும் என்று சொல்லி எதிர்த்தான். விளையாட்டாய் அவனை வென்றுவிடலாம் என்று நினைத்தார் அனுமன். ஆனால் அவனோ, கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டான். முடிவே இன்றி சண்டை நீண்டுகொண்டே போக, சற்றே நிறுத்திவிட்டு, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் இளைஞனே, நீர் யார் ? உன் பெற்றோர் யார் ? கேட்டார் அனுமன். அவன் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது. வல்லமை மிக்க வானர வீரரான அனுமனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்தவன் நான். மகரத்துவஜன் என் பெயர். கம்பீரமாகச் சொன்னான், இளைஞன். திடுக்கிட்டுப் போன அனுமன், தான் யார் என்பதை அவனுக்குச் சொன்னார். பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கும் தனக்கு அவன் எப்படிப் பிள்ளையாவான் ? என்று கோபத்தோடு கேட்டார்.
அப்போது, அங்கே வந்தாள் சுவர்ச்சலாதேவி. அனுமனைப் பணிந்தாள். பராக்ரமம் மிக்கவரே.... தாங்கள் பிரம்மச்சரியம் பிசகாமல் வாழ்பவர் என்பது உண்மைதான். அதேசமயத்தில், இவன் உங்கள் மகன் என்பதும் உண்மைதான். சீதாபிராட்டியைத் தேடி தாங்கள் இலங்கைக்குச் சென்றபோது, உங்கள் வாலில் தீ மூட்டப்பட்டதல்லவா? அத்தீயால் இலங்கையை எரித்துவிட்டு, கடலிலே உங்கள் வாலை நனைத்து தீயை அணைத்தீர்கள். அப்போது, உங்கள் வியர்வை, கடலில் விழுந்தது. மகரமீன் வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த நான், அந்த வியர்வையை விழுங்கினேன். அதன் விளைவாக என் கருவில் உருவாகிப் பிறந்தவன் இவன். நம் மகன் ! ஆச்சர்யத்தோடு ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்த சுவர்ச்சலாதேவி, மயில்ராவணன் மாயையால் மயக்கி மகரத்துவஜனை அடிமைப்படுத்தி வைத்திருப்பதையும் சொன்னாள். பிரம்மச்சரிய விரதம் கெடாமலே தனக்கு ஒரு மகன் பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார் மாருதி. பின் மயில்ராவணனின் மாளிகைக்குள் நுழைந்து மாயைகளை அழித்து அவன் மரணத்துக்கும் வழிவகுத்தார். ராமரின் ஆசியோடு தன் மகனை பாதாள உலகிற்கு மன்னனாக்கினார். பிள்ளையாரும் முருகனும் எப்படி சிவசக்தியின் நேரடி ஐக்கியமில்லாமல் பிறந்தார்களோ, அப்படியே சிவனின் அம்சமான அனுமனுக்கும், அம்பிகையின் அம்சமான சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்தவன், மகரத்வஜன்.