பதிவு செய்த நாள்
12
நவ
2019
04:11
வியாழக்கிழமை என்றாலே தட்சிணாமூர்த்தி சன்னதியில் கூட்டம் அலைமோதுகிறது. குருவுக்குப் பரிகாரம் செய்ய வருபவர்களே இதில் அதிகம் இருப்பர். ஆனால் இவர்களோ குருவுக்குரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்கின்றனர்.
தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என பொருள். அதாவது தெற்கு நோக்கி இருப்பவர். நவக்கிரகங்களில் ஒருவரான குருவின் திசை வடக்கு. திசைகளில் இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல குரு மஞ்சள் நிற ஆடை உடுத்துபவர். பூ – முல்லை, தானியம் – கொண்டைக் கடலை.
தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடை உடுத்துபவர், வில்வமாலை சூடுபவர். உண்மை இப்படி இருக்க குருவுக்கு பரிகாரம் செய்பவர்கள், ஞான குருவான தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம், கொண்டைக்கடலை மாலையைச் சாத்துகின்றனர். இது தியானத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு இடையூறாக இருக்கும். ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வியாழன் அன்று தான் வழிபட வேண்டும் என்ற என்பதில்லை.
சொல்லப் போனால் வியாழனுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் சம்பந்தமே இல்லை.
சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் சிவனின் திருக்கோலமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழிருக்கும் இவரை ஆதிகுரு அல்லது ஞானகுரு என்பர். அதே நேரம் தேவலோகத்தில் தேவர்களுக்கு ஆசிரியராக இருப்பவர் குருபகவான், வியாழன் எனப்படும் ப்ரகஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவருக்கும் குரு என்றே பெயர் வந்தது.
ஞானகுரு தட்சிணாமூர்த்திக்குரிய ஸ்லோகத்தில்
குருப்ரஹ்மா: குருர் விஷ்ணு:
குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குருவே நம:
இதிலுள்ள குரு என்னும் சொல்லால் குருபகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒருவரே என நினைக்கின்றனர். சிவபெருமான் இட்ட கட்டளையைச் செய்பவர்கள் நவக்கிரகங்கள். இவர்களில் சுப கிரகமாகவும், நன்மை அளிப்பவராகவும் இருப்பவர் குருபகவான். குரு பார்க்க கோடி நன்மை என பழமொழியும் இதனால் ஏற்பட்டது. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்தது நிறைவேறும். குருபலம் இருந்தால் திருமணம் நடந்தேறும். மகப்பேறு கிடைக்கும். எனவே, குருவின் அருளால் திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், உயர் கல்வி பெறவும் அவருக்கு பரிகாரம் செய்ய விரும்புகின்றனர். இவர்கள் குருப்பெயர்ச்சி மற்றும் வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் வடக்கு நோக்கிய குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம், கொண்டைக்கடலை, மாலை சாத்தி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை விரதமிருந்து வடக்கு நோக்கி தீபமும் ஏற்றலாம். அதே நேரம் ஞானம் பெற விரும்புவோர் தட்சிணாமூர்த்தியை எல்லா நாட்களிலும் வழிபட்டு பலன் பெறலாம்.