Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நரசிம்மர்
  அம்மன்/தாயார்: அலர்மேல்மங்கை
  தீர்த்தம்: நரசிம்ம தீர்த்தம்
  ஊர்: கீழப்பாவூர்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளிலும், பிரதோஷத்திலும் சிறப்பு பூஜை.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். முதல் முதலில் அவதாரம் எடுத்த போது கூட வெறும் இரண்டு நாழிகைகள் தான் இப்பூமியில் நீடித்திருந்தார், பின்பு வைகுண்டம் சென்றுவிட்டார். ஆனால் ரிஷிகளுக்கு இத்தலத்தில் காட்சியளித்த பின்பு, கீழப்பாவூரில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். மேலும் அநேக நரசிம்மர் ஆலயங்கள் காடு அல்லது மலைப்பகுதியில் அமைந்திருக்கும். இங்கே முற்றிலும் சமதளமான பகுதியில் பக்தர்கள் எளிதில் வழிபடுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. வேளாண்மைப் பகுதியில் உள்ள இந்த கோயில் நரசிம்மரை வழிபடுவர்களுக்கு 1500 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். இங்கு வந்து வழிபட்டு , திருப்பதியையும், அகோபிலத்தையும் ஒரு சேர தரிசித்த மன நிறைவு அடையலாம். இங்கே வெங்கடாஜலபதியையும் நரசிம்மரையும் தரிசிப்பவர்களுக்கு சிறப்பான வாழ்வு அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கீழப்பாவூர்-627 806, திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 94423 30643 
    
 பொது தகவல்:
     
  நரசிம்மப் பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.குடைவரை பாணியில் கருவறை மிகச்சிறியதாக உள்ளது. ஆலயத்தின் முன்பகுதியில் கிழக்கு நோக்கிய சன்னதியில் அலர்மேல்மங்கை தாயார் சமேதராய் பிரசன்ன வெங்கடாஜலபதி வீற்றிருக்கிறார். ஆலயத்தின் முன்னுள்ள தீர்த்தம் நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

மிகவும் எளிமையான இந்த ஆலயத்தில்  இரு சந்நிதிகள் உள்ளது கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் அலர்மேல் மங்கா- பத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். இச்சந்நிதியை ஒட்டி பின்புறமாக மேற்க நோக்கியுள்ள தனிச் சந்நிதியில்  திரிபங்க நிலையில் இரண்யனை வதம் செய்தபடி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். புராணச் சிறப்பு மிக்க கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம் முதல் முதலில் எப்போது ,யாரால் அமைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. தற்போது கோயில் முன்பொருமுறை பழுதடைந்துள்ளதை மன்னர்கள் சரி செய்துள்ளனர். அதன் அடிப்படையில் 1200 ஆண்டுகள் தொன்மையானது இந்த ஆலயம். சோழ, பாண்டிய மன்னர்கள் இத்திருக்கோயிலுக்கு செய்துள்ள திருப்பணிகளை இங்குள்ள 43 கல்வெட்டுக்கள் எடுத்துக்கூறுகின்றன.

மாறவர்மன் திரபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய மன்னன் தான்  ஆட்சிக்கு வந்த ஏழாம் ஆண்டில் இத்திருக்கோயிலுக்கு நித்ய பூஜைகளுக்கு நிலங்கள் வழங்கி வழிபட்டுள்ளனார். சோழர்கள் காலத்தில் இவ்வூர் சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும்  சோழ மன்னர்களின் மனைவியான அறிஞ்சிகைப் பிராட்டியின் பெயரால் அறிஞ்சிகைப் பிராட்டி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. மேலும் குறுமறை நாடு முனைமோகர் பாகூர் , சதுர்வேதி மங்கலம்ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  கடன்களிலிருந்து நிவாரணம் பெறவும், தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறவும் இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  நெய்தீபம் ஏற்றி நரசிம்மரை பதினாறு முறை வலம் வந்து வந்தும், பானகம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். நரசிம்மருக்குரிய நட்சத்திரமான சுவாதிநாளிலும், பிரதோஷத்திலும் இளநீர் மற்றும பால் அபிஷேகம் நடக்கிறது. 
    
 தலபெருமை:
     
  பதினாறுகை நரசிம்மர்:மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன.

நவக்கிரகங்கள், பஞ்ச பூதங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்கி, கேட்பதைத் தரும்  கற்பக தருவாய் அருள்பாலிக்கிறார், கீழப்பாவூர் நரசிம்மர், ரிஷிகளுக்கு  காட்சி கொடுத்து, நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்ட புராண சிறப்புமிக்க தலம் இது. மூர்த்தி,  ஸ்தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புக்களை உடையது இவ்வாலயம்.

வடிவச் சிறப்பு
: இராஜஸ்தான் மாநிலம், பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி ஆகிய தலங்களுக்கு அடுத்தபடியாக கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தலையில் கிரீடத்துடனும், வெண்கொற்றக்குடையுடனும் கம்பீரமாக காட்சி தரும்  நரசிம்மரை சூரியனும் , சந்திரனும் வெண்சாமரங்கள்  வீசி வணங்கிக் கொண்டிருக்கின்றனர். இரண்யனின் தந்தையும், பிரகலாதனின் தாத்தாவுமான காசியப்பர், பிரகலாதன், அவனுடைய தாய் ஆகியோர் நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனைய திருக்கரங்களில் ஆயுதங்களுடன் வீற்றிருக்கும் நரசிம்மர்,இரண்டு கரங்களால் சக்கரம், சங்கு தரிசனம் தந்து, வலது கரம் ஒன்றால்  நாரதரின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய அபூர்வ வடிவ சிறப்புடன் அருள்புரிந்து வரும் நரசிம்மரை மிக அருகில்  நின்று  வழிபடலாம்.

சிங்க கர்ஜனை: இவ்வாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாயராட்சை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டதாக இப்பகுதி மக்களிடம்  செவி வழிச் செய்தி  உலாவுகிறது.  நரசிம்மரின் உக்ரம் காரணமாக கர்ஜனை சத்தம் கேட்டதாகவும்.  பால் , இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத்தொடங்கிய பிறகே சிங்க கர்ஜனை சத்தம் நின்றதாக கூறப்படுகிறது. இவருடைய சன்னிதி முன்பாகவே  மாபெரும் தெப்பக்குளம்  ஏற்படுத்தப்பட்டு உக்ரத்தை தணித்துள்ளனர். இப்போது சாந்த சொரூபியாகிவிட்ட நரசிம்மர், கண்களை மூடி தியானித்தபடியே காட்சி தருகிறார்.

நரசிம்மர் தீர்த்தம்: ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஈசான்ய திக்கில் தான் தீர்த்தம் அமைந்திருக்கும்,  ஆனால், நரசிம்மர் சன்னிதி முன்பாகவே தீர்த்தம் அமைந்திருப்பது  வேறெங்கும் காணமுடியாத சிறப்பு. ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திரப்படி இந்த தீர்த்தம் நர்மதை ஆகவும் தேவப்ராசிபடி கங்கை ஆக விளங்குவதும் இந்த நரசிம்மர் தீர்த்தத்தின் சிறப்பு ஆகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி, திருவோணம், வளர்பிறை சதுர்தசி நாள்களில் ஆலயத்தோடு  சேர்த்து தீர்த்தம் வலம் வருதல் உற்சவமும் இங்கே நடக்கிறது.

சுவாதி பூஜை: ஒவ்வொரு மாதமும் நரசிம்மருடைய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் பால், இளநீர் மற்றும் திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம்  நடக்கிறது.  சுவாதி நட்சத்திரந்தோறும் தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு வந்தால் ருண விமோசனம் எனப்படும் கடன் தொல்லை நீங்கி, செல்வம் பெருகும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். மேலும் ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் பில்லி, சூனியம், ஏவல்,  எதிரிகள் தொல்லையிருந்தும் விடுபடலாம்.

பரிகாரத்தலம்: கல்யாணத்தடை,  கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கு  இங்கு பரிகாரம் செய்து பலன் பெறலாம். சுவாதிநட்சத்திரக்காரர்களுக்கான தலம் இது.

நீராஞ்சனம்: ஆலயத்தின் நீராஞ்சனம் என்னும் நெய்தீபம் ஏற்றி, 16 சுற்றுக்கள் பிரதட்சிணமாக வலம் வந்து நரசிம்மரை வழிபடுவர்களுக்கு, வேண்டுதல்கள் விரைந்து நிறைவேறுகிறது. நரசிம்மருக்கு  மிகவும் விருப்பமான வெல்லத்தினால் ஆன பானகம் அமுது செய்வித்தும் வழிபடலாம்.

வழிபட உகந்த நாட்கள்: நரசிம்மரை வழிபடுவதற்கு, செவ்வாய் ,புதன், சனி, ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். சுவாதி, திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி, கார்த்திகை மாதபிறப்பு, புரட்டாசி சனி, முன்பத்து, பின்பத்து , வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி ஆகிய நாள்களில் இங்கே விசேஷ பூஜை நடக்கிறது. ஞான சக்தி வடிவமாக  விளங்கும் கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அகோபிலத்தில் உள்ள நவ நரசிம்மரையும் வழிபட்ட பலன் கிட்டும், நவக்கிரகங்கள் , பஞ்ச பூதங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நன்மை உண்டாகும்.
 
     
  தல வரலாறு:
     
  நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். பொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்துவரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் அவர் கூறினார். நால்வரும் பெருமாளைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தனர். அந்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. இதையடுத்து பிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்ய சம்ஹார கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார். கர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர். பிற்காலத்தில் பெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர்.

சப்த ரிஷிகளுள் ஒருவரான  காசியப்பர், வருண பகவான் சுகோஷன் முனிவர் முதலானோர்  நரசிம்மர் தரிசனம் வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்தனர். மகாவிஷ்ணு ரிஷிகளிடம் அசரீரியாகப் பேசினார்.   இறவா வரம் பெற்ற ரிஷிகள்,  நீராடுவதற்காக பொதிகை மலையில் தாமிரபரணி  நதியில் அகத்தியர் 32 தீர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளார் அதில் ஒன்றான மணிமுக்தா தீர்த்தத்தில் (தற்போது  பாபநாசம்  பாணதீர்த்தம் ) நீராடி, அங்கிருந்து  40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ர(õ) நதிக்கரையில் தவத்தை தொடருங்கள், நரசிம்மர் தரிசனம் கிட்டும் என்பதே அசரீரி வாக்கு.

அதன்படியே மணிமுக்தா தீர்த்தத்தில் புனித நீராடினர் ரிஷிகள். பின்னர் பகவான் சுட்டிக்காட்டிய இடத்தில் மீண்டும் தவம் இருந்தனர். அவர்களின் கடுந்தவம்  மாலவனின் மனதைத் தொட்டது. உடனே ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் 16 திருக்கர நரசிம்மராக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தார். மகா உக்ரமூர்த்தியைக் கண்ட ரிஷிகள், கிருதாயுகத்தில் கிட்டாத  மஹாபாக்யம் இப்போது கிடைத்ததை எண்ணி ஆனந்தம் அடைந்தனர். காட்சி கொடுத்தபடியே அதே இடத்தில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார். அந்தப்புனிதத்தலமே தற்போதைய சீழப்பாவூர் ஆகும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar