சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாள், துர்க்கைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் குமார சஷ்டி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில்
கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
பொது தகவல்:
நடராஜர் சன்னதிக்கு அடியில் பழங்காலத்தைச் சேர்ந்த பாதாளச் சுரங்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிராகாரத்தில் விநாயகர், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, நாகர், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் அருள்கின்றனர். இத்தலத்தில் சனிபகவான் ராகு-கேதுக்களுக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. அருகே நாகலிங்க மரமும் உள்ளது. ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 4.30-6.00 இங்கு ராகு கால சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பிரார்த்தனை
மந்தபுத்தி விலக, பார்வைக் கோளாறு நீங்க, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இத்தல அன்னை கரும்பால் மொழி அம்மை என்னும் திருப்பெயரோடு பக்தர்கள் குறைபோக்கி வருகிறாள். பிரதோஷ காலங்களில் மிக விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் செய்யப் படுகின்றன. கார்த்திகை, தை மாதங்களில் திருவிழாக்கள் அமர்க்களப்படும். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 280 கட்டளைதாரர்கள் இவ்வாலயத்திற்கு முறைப்படி பூஜைகளைத் தடையின்றி நடத்தி வருகிறார்கள். இங்கு வந்து மனமுருக வேண்டும் பக்தர்களுக்கு மங்களங்களை அருளுகிறார் கடகாலீஸ்வரர். பித்தம் தெளிவது, பார்வைக் கோளாறு நீங்குவது, இழந்த பொருள் கிடைப்பது போன்ற பல்வேறு நன்மைகளை இங்கு வரும் பக்தர்கள் பெறுவது அனுபவப் பூர்வமான உண்மை.
தல வரலாறு:
சிவபெருமான் தன் பக்தர்களின் துயர் களையவும்; அவர்களின் பெருமையைப் பாரெல்லாம் அறியச் செய்யவும் பற்பல திருவிளையாடல்களை நடத்தியுள்ளார். அவ்வாறு ஒரு திருவிளையாடல் புரிந்த இடம்தான் மேலக் கடையநல்லூர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குற்றாலத்துக்கு அருகே உயர்ந்து நிற்கும் சிகரங்களில் ஒன்று கைக் கெட்டான் கொம்பு சிகரம். அங்கு உற்பத்தியாகி பெருக்கெடுத்து வரும் கரும்பால் நதிக்கரையில்- காலகேதார வனம் என்னும் வில்வ வனத்தில் சுயம்பு மூர்த்தியாக முகிழ்த்து அருள்பாலித்து வருகிறார் காலகேதார நாதர் எனப்படும் கடகாலீஸ்வரர்! இந்த சிவலிங்கத்தின் தோற்றம் கிருத யுகத்துடன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது மகாவிஷ்ணுவின் சூழ்ச்சியால் அசுரர்கள் வஞ்சிக்கப்பட்டனர். இதனால் தேவாசுர யுத்தம் ஏற்பட்டது. அமிர்தம் உண்ட காரணத்தால் தேவர்களின் கை ஓங்க, அசுரர்கள் தோற்றோடினர். அப்போது பிருகு முனிவரின் மனைவியான கியாதி என்பவள் அசுரர்களுக்கு அடைக் கலம் கொடுத்தாள். இதையறிந்த மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தை ஏவி கியாதியின் தலையைத் துண்டித்தார். மனைவியைப் பறிகொடுத்த பிருகு முனிவரின் மனம் பேதலித்தது. பித்து பிடித்தவராய் அலைந்து திரிந்தார் முனிவர். இதைக் கண்ட மற்ற முனிவர் கள் அவரை மந்திர தீர்த்தத்தால் அபிஷேகித்து சற்று சுயநினைவு ஏற்படச் செய்தனர். பித்தம் முற்றிலும் தெளிந்து பழைய ஞான நிலையை அடைய விந்திய மலைக் குச் சென்று தவமியற்றும்படி பிருகு முனிவரிடம் கூறினர். அவ்வண்ணம் விந்திய மலைக்கு வந்த முனிவர் கடுந்தவம் மேற்கொள்ள, அவர்மீது கருணை கொண்ட சிவபெருமான் காலகேதார லிங்கத்தை வழிபடுமாறு அசரீரி வாக்கால் முனிவருக்கு உணர்த்தினார். மேலும் அந்த லிங்கம் இருக்கும் இடத்தை ஒரு ஒளிவடிவில் வழிகாட்டிச் சென்று காட்டியருளினார். அந்த லிங்கத்தை பிருகு முனிவர் மனமுருகி ஆராதனை செய்துவர, ஈசன் அங்கு முனிவருக்கு திருக்காட்சி நல்கி, அவரின் பித்தத்தைத் தெளிவித்து வரங்கள் பலவும் அருளினார்.
பின்னர் இந்த சிவலிங்கம் யாரும் அறியாத நிலையில் மண்ணுக்குள் புதையுண்டிருக்க, கலியுகத்தில் அதை வெளிப்படுத்த திருவுளம் கொண்டார் இறைவன். ஒரு முனிவரின் வடிவில் அப்பகுதிக்கு வந்த ஈஸ்வரன், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களை அழைத்து தாகத்திற்கு நீர் கேட்டார். உபசரிக்கும் பண்பு கொண்ட அவர்கள் மூங்கிலால் செய்யப்பட்ட கடகால் என்னும் பாத்திரத்தில் பாலையூற்றி அவருக்கு கொடுத்துவிட்டு ஆடுகளை கவனிக்கச் சென்றுவிட்டனர். பாலை அருந்திய முனிவர் கடகாலைக் கவிழ்த்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். திரும்பி வந்த இடையர்கள் கடகாலை எடுக்க முற்பட, அது தரையோடு பிணைந்துவிட்டிருந்தது. எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியாமல் போகவே, கோடாரி கொண்டு அதன் அடிப் பகுதியை வெட்ட, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன இடையர்கள் ஓடிச்சென்று நடந்த நிகழ்ச்சியை அப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் ஜெயத்சேன பாண்டியனிடம் கூறினர். ஆச்சரியப்பட்ட மன்னன் உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்றான். மன்னன் பார்வையில்லாத வன் என்பதால், இடையர்கள் குறிப்பிட்ட இடத்தை தன் கைகளால் தடவிப் பார்த்தான். ரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தான். அப்போது நிலத்தில் மறைந்திருந்த லிங்கம் வெளிப்பட்டது. அதே வேளையில் மன்னனுக்கு பார்வையும் வந்துவிட்டது. பெரும் மகிழ்வுற்ற மன்னன், கண் தந்த கருணைக் கடலே! கடகாலீஸ்வரா! என்று பலவாறு துதித்து வணங்கினான். அங்கேயே ஈசனுக்கு ஆலயம் அமைத்த பாண்டிய மன்னன், அருகில் நகரையும் நிறுவினான். கடகாலிலிருந்து வெளிப்பட்டதால் ஈசன் கடகாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அந்த ஊரும் கடகாநல்லூர் எனப்பட்டது. அந்த தலமே தற்போது கடையநல்லூர் எனப் படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.