அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் உள்ளது. இங்கு முருகன் பாதமும், அருகில் லிங்கமும் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை,மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
சிவகிரி- 627 757.திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91- 4636 - 251 015, 99448 70058, 99448 73484.
பொது தகவல்:
கோயில் பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை, இடும்பன் சன்னதிகளும் இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு தனியே சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பிரம்மா, சண்டிகேஸ்வரர் இருவரும் எதிரெதிரே இருக்கின்றனர். குன்றின் மத்தியில் காளியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. காலை, சாயரட்சை (மாலை) பூஜையின்போது மட்டும் இவளுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.
பவுர்ணமி இரவில் இவளுக்கு விசேஷ பூஜை உண்டு. இத்தலத்தின் சிறப்பு நவக்கிரக முருகன். இங்குள்ள தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம்.
பிரார்த்தனை
கிரக தோஷம், புத்திரதோஷம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்ள நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
முருகனுக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
முருகன் பாதத்தில் நவக்கிரகம்: இக்கோயிலில் முருகன், தனது ஜடாமுடியையே கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம் நீக்குபவராக இவர் அருளுவதால், இவ்வாறு வைத்துள்ளனர். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது அரிது. தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் முருகனை வழிபட தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. திருச்செந்தூர் முறையிலேயே, இங்கு சுவாமிக்கு பூஜை செய்யப்படுகிறது.
பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடக்கும். சில தலங்களில் திருக்கல்யாணத்துடன் சேர்த்து 7 நாட்களாக நடத்துவர். ஆனால் இக்கோயிலில் இவ்விழா 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் ஆறாம் நாளில் முருகன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வது விசேஷம். மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 11ம் நாளன்று முருகனுக்கு தங்க கிரீடம் அணிவித்து, கையில் செங்கோல் கொடுத்து "மகுடாபிஷேகம்' செய்கின்றனர். அதன்பின்பு இவர் ராஜ அலங்காரத்தில் "பட்டினப்பிரவேசம்' என்னும் வீதியுலா செல்கிறார். இந்த திருவிழா இங்கு பிரசித்தி பெற்றது.
முருகன் வடிவில் சம்பந்தர்: குழந்தையாக இருந்தபோதே, அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி அவளது அருள் பெற்றவர் திருஞானசம்பந்தர். இவரை முருகன் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் சொல்வர். இத்தலத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் சம்பந்தருக்கு, அம்பாள் ஞானப்பால் கொடுத்த வைபவம் நடக்கிறது. அப்போது முருகனையே, சம்பந்தராக பாவித்து பால் கொடுக்கின்றனர். விழாவின் ஏழாம் நாளன்று இரவில் நடக்கும் முதல் கால பூஜையில் முருகன் சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து சிவன் அம்சத்துடனும் (சிவப்பு சாத்தி), இரண்டாம் காலத்தில் வெண்ணிற வஸ்திரம் அணிந்து பிரம்மா அம்சத்துடனும் (வெள்ளை சாத்தி), மறுநாள் அதிகாலை மூன்றாம் கால பூஜையில் பச்சை வஸ்திரம் அணிந்து திருமால் அம்சத்திலும் (பச்சை சாத்தி) காட்சி தருவது விசேஷம். பங்குனி உத்திரத்தன்று சுவாமி தீர்த்த நீராடச்செல்கிறார்.
சோமாஸ்கந்த தலம்: சுற்றிலும் தண்ணீர், மலைகள் சூழ அமைந்த அழகிய தலம் இது. கோயில் அமைந்துள்ள குன்று "சக்தி மலை' எனப்படுகிறது. இதற்கு இடப்புறத்தில் "சிவன் மலை' உள்ளது. அதாவது சிவன், அம்பாளுக்கு நடுவே முருகன் "சோமாஸ்கந்த' வடிவில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். முருகன் சன்னதிக்கு வலப்புறம் சுந்தரேஸ்வரர், இடப்புறம் மீனாட்சியம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சண்முகர் பங்குனி பிரம்மோற்ஸவத்தில் ஏழாம் நாள், கந்த சஷ்டியின்போது திருக்கல்யாணம் மற்றும் இவ்விழாவின் 11ம் நாள் ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே கோயிலில் இருந்து வெளியேறி தரிசனம் தருகிறார். மற்ற நாட்களில் இவரை கோயிலுக்குள் மட்டுமே தரிசிக்க முடியும்.
தல வரலாறு:
முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்துவிட்டு, தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் திரும்பினார். அப்போது முருகனின் தரிசனம் காண விரும்பிய அகத்தியர் இத்தலத்திலுள்ள குன்றில் தவம் செய்து கொண்டிருந்தார். இவ்வழியே வந்த முருகன், குன்றின் மீது அகத்தியருக்கு காட்சி கொடுத்தார். அவரது வேண்டுதல்படி இங்கேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சூரபத்மனை போரிட்டு அழித்த முருகன் இங்கு பால வடிவில் காட்சி தருவதால், "பாலசுப்பிரமணியர்' என்று அழைக்கப்படுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் உள்ளது. இங்கு முருகன் பாதமும், அருகில் லிங்கமும் உள்ளது.
இருப்பிடம் : மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் 108 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பிலிருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.