மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் இருக்கிறது.
திறக்கும் நேரம்:
இக்கோயில் புதன், சனிக்கிழமையில் மட்டும் காலை 10 - மதியம் 2 மணிவரையிலும், மற்ற நாட்களில் காலை 8 - 10 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும். பிற நேரங்களில் சுவாமியை தரிசிக்க செல்வோர், அர்ச்சகரை முன்கூட்டியே போனில் தொடர்பு கொண்டுவிட்டு செல்வது நல்லது
முகவரி:
அருள்மிகு பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) திருக்கோயில்,
மலையான்குளம்-627 416,
திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91- 4634 - 254 721, 93603 12580.
பொது தகவல்:
மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் இருக்கிறது. லிங்கத்திற்கு பின்புறத்தில் சித்ரபுத்ர தர்மசாஸ்தா, பாடகலிங்க நாச்சியார் இருவரும் காட்சி தருகின்றனர். இந்த சன்னதி எதிரில் யானை, குதிரை, நந்தி ஆகிய வாகனங்கள் இருக்கிறது. முன்மண்டபத்தில் பரிவார மூர்த்தியாக இருக்கும் விநாயகரும் சுவாமியின் பெயரால், "பாடக பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு பாடகலிங்கசுவாமி பிரதான மூலவர் என்றாலும், பேச்சு வழக்கில் இக்கோயில், "பாடகப்பிள்ளையார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.
தங்களது குல தெய்வம் தெரியாத பக்தர்கள் இங்கு சாஸ்தாவை, குலதெய்வமாக கருதி வழிபடுகிறார்கள். சனி, புதன்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தளவாய் மாடத்தி, வனபேச்சியம்மன், தர்மசாஸ்தா, பிரம்மராட்சி, கெங்காதேவி, பேச்சியம்மன், விடுமாடத்தி, விடுமாடன், தக்கராஜன், சுடலைமாடன், தம்பிரான், சின்னதம்பி, கருப்பசாமி, துண்டிமாடன், பலவேசக்காரன், பொம்மக்கா, திம்மக்காவுடன் பட்டவராயன் ஆகிய காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஓரிடத்தில் நாகர் சிலைகளை நவக்கிரக அமைப்பில் வைத்துள்ளனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் பிரம்மரட்சிக்கு பொட்டுத்தாலி அணிவித்து, குங்குமம், மஞ்சள்பொடி, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, பன்னீர் மற்றும் விளக்கெண்ணெய் சேர்ந்த "மஞ்சணை' என்னும் கலவையை நெற்றியில் சாத்தி வழிபடுகிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இங்கு சாஸ்தா மற்றும் காவல் தெய்வங்களுக்கு படையல் வைத்தும், சர்க்கரைப்பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
ஓணத்திருவிழா: கேரளத்தை ஆண்ட மன்னர் கட்டிய கோயில் என்பதாலும், சாஸ்தா சிவன், பெருமாள் இருவரின் அமைப்பாக பிறந்தவர் என்பதாலும் இங்கு "ஓணம்' விழா விசேஷமாக 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இவ்விழாவின்போது, பாடகலிங்க நாச்சியாரை சுனையில் இருந்து அழைத்து வரும் வைபவம் விசேஷமாக நடக்கும். விழாவின் மூன்றாம் நாளில் சுவாமிக்கு புனிதப்படுத்தும் சடங்கு நடக்கும். அப்போது, எண்ணெய்க்காப்பிட்டு அலங்காரம் செய்யப்படும்.
சிலையாக மாறிய சகோதரர்கள்: முற்காலத்தில் இங்கு அண்ணன், தம்பிகள் ஏழு பேர் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு தங்கை மட்டும் இருந்தாள். ஒருசமயம் இதே பகுதியைச் சேர்ந்த வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், அப்பெண்ணை மணம் முடிக்க விரும்பினான். இதையறிந்த சகோதரர்கள் எதிர்த்தனர். அப்பெண்ணை அழைத்துக்கொண்ட இளைஞன், இங்கு வந்து சுவாமியிடம் தஞ்சமடைந்தான். அவனைத்தேடி சகோதரர்களும் இங்கு வந்தனர். அவர்கள் முன் தோன்றிய சித்திரபுத்திர சாஸ்தா, சமாதானமாகச் செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனவே அவர்களை சுவாமி அப்படியே சிலையாக மாற்றி விட்டார். இவர்கள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கின்றனர். அண்ணன், தம்பிகள் ஏழுபேர், அவர்களது தங்கை, அவளை மணக்க விரும்பிய இளைஞன் அனைவரும் இங்கு சிலையாக இருக்கின்றனர். சகோதரர்களில் ஒருவர் தலை மீது கை வைத்தபடி காட்சியளிக்கிறார். சுவாமி இவர்களை சிலையாக மாற்றியபோது, அவர் வருத்தத்தில் தலையில் கை வைத்தாராம். இந்த அமைப்பிலேயே இவர் இவ்வாறு சிலையாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
தல வரலாறு:
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட கேரள மன்னர் ஒருவரின் மனைவி, தனியே வனத்தைச் சுற்றிப்பார்க்க சென்றார். நீண்ட தூரம் வந்த அவளுக்கு தாகம் உண்டானது. அருகில் ஒரு பள்ளத்தில் சுனை இருந்ததைக் கண்டு, அதில் நீர் பருகுவதற்காக இறங்கினாள். அப்போது தான் அணிந்திருந்த பாடகத்தை (காலில் அணியும் "தண்டை' என்னும் ஆபரணம்) கரையில் கழற்றி வைத்துவிட்டுச் சென்றாள். சுனையில் நீர் பருகிய அவள், மீண்டும் கரையேற முடியவில்லை. பயத்தில் அவள் கூச்சலிடவே, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சென்று பார்த்தனர். மன்னரின் மனைவி சுனைக்குள் இருந்ததைக் கண்ட அவர்கள், மன்னருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இங்கு வந்து மனைவியை மீட்டார். அவள் சுனையின் கரையில் வைத்த பாடகங்கள் இரண்டும், சற்று தூரத்தில் ஒரு மூங்கில் கன்றில் சிக்கியிருந்தது. அதை எடுப்பதற்காக மன்னன் ஒரு கோடரியால் மூங்கிலை வெட்டினாள். அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. பயந்த மன்னரும், மனைவியும் அரண்மனைக்கு திரும்பிவிட்டனர்.
மறுநாள் அரசவை குருவை அழைத்துக்கொண்டு மன்னர் அங்கு சென்றார். பாடகம் இருந்த இடத்தில் இரண்டு லிங்கங்கள் இருந்தது. அப்போது ஒலித்த அசரீரி, ""மன்னா! நீ என்னைக் கண்ட இடத்திலேயே கோயில் எழுப்பு,'' என்றது. மன்னனும் இங்கு கோயில் எழுப்பினான். அப்போது சிவன் அவனுக்கு காட்சி தந்து, தனது இடத்திலேயே அவனையும், மனைவியையும் இருக்கும்படி கூறினார்.
அதன்படி மன்னரும், அவனது மனைவியும் இங்கேயே தங்கி, சிவனுக்கு சேவை செய்தனர். சிறிது காலத்தில் அவர்கள் சிவனுடனே ஐக்கியமாகினர். இவர்களுக்கும் சிவன் சன்னதிக்குள்ளேயே சிலை வடிக்கப்பட்டது. இப்பகுதியை காக்கும் காவல் தெய்வமாகவே இவர்கள் வணங்கப்பட்டதால் மன்னருக்கு சித்ரபுத்திர தர்மசாஸ்தா என்றும், ராணியை பாடகலிங்க நாச்சியார் என்றும் பெயர் சூட்டினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் இருக்கிறது.
இருப்பிடம் : திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ., தூரத்திலுள்ள கல்லிடைக்குறிச்சிக்குச் சென்று, அங்கிருந்து 9 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.
கல்லிடைக்குறிச்சியில் இருந்து பஸ் வசதி அதிகமில்லை. ஆட்டோ அல்லது கார்களில் செல்வது நல்லது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருநெல்வேலி, தூத்துக்குடி
அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை, திருவனந்தபுரம், தூத்துக்குடி