பதிவு செய்த நாள்
27
மே
2020
04:05
சைவம், வைணவத்தை இணைக்கும் பாலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க கோயில் இது. ராமர் வழிபட்ட ராமநாத சுவாமி மூலவராக இருக்கிறார். ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழகத்தில் அமைந்த ஒரே தலம் இது.
இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இதை தவிர கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. மதுரையைப் போலவே இங்குள்ள பர்வதவர்த்தினி அம்மன் சுவாமிக்கு வலப்புறத்தில் இருப்பதால் சக்தி மிக்க தலமாக கருதப்படுகிறது. இந்தியாவின் நான்கு புறங்களில் கிழக்கே பூரியும், மேற்கே துவாரகையும், வடக்கே பத்ரிநாத்தும், தெற்கே ராமேஸ்வரமும் புகழ் மிக்க புனித தலங்களாகும். இவற்றில் ராமேஸ்வரம் மட்டும் சிவத்தலமாகவும், மற்றவை விஷ்ணு தலங்களாகவும் உள்ளன. ‘ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை, குருவிக்கு ஏற்ற ராமேஸ்வரம்’ ‘தொலையாத பாவம் கூட ராமேஸ்வரத்தில் நீராடத் தொலையும்’ என சொலவடைகள் உண்டு. ராமேஸ்வர தீர்த்தங்களில் நீராடினால் கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும் என்பதை இது உணர்த்துகிறது.