பதிவு செய்த நாள்
27
மே
2020
04:05
காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராம லிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர அபூர்வமான லிங்கம் ஒன்றுள்ளது. அதுதான் உப்பு லிங்கம்!
ஒருமுறை பாஸ்கர ராயர் என்னும் மகான் தரிசனத்திற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது சிலர், ‘‘இந்தக் கோயிலில் மூலவராக உள்ள ராமலிங்கத்தை சீதாதேவி மணலில் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது அந்த லிங்கம் கரைந்திருக்க வேண்டுமே!’’ என வாதம் செய்தனர். சந்தேகம் கொண்ட அவர்களின் மூலமாக உப்பு கொண்டு வரச் செய்தார் பாஸ்கரராயர். அதில் லிங்கம் ஒன்றைச் செய்து பிரதிஷ்டை செய்தார். அதற்கு அபிேஷகம் செய்தும் காண்பித்தார். அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது. சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இன்று வரை அபிஷேகம் நடந்தும் கரையவில்லை.
‘அம்பிகையை வழிபடும் மனிதனான நான் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாத போது, கடவுளின் அவதாரமான ராமரின் மனைவி சீதை பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் அதிசயம் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டார். வலிமை மிக்க இதற்கு ‘வஜ்ர லிங்கம்’ என்றும் பெயருண்டு. இவரை தரிசித்தால் நோய் தீரும். மனம், உடல் பலம் பெறும்.
ராமேஸ்வரம் சென்றால் உப்பு லிங்கத்தை தரிசிக்க மறவாதீர்.