நெய்வேலியில் இருக்கும் நடராஜர் கோயில் பிரசித்தமானது. 63 நாயன்மார்களுக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் நாயன்மார்களின் குருபூஜை சிறப்பாக நடத்தப்படும். மன்னர்கள் காலத்தில் அரண்மனை வாசலில் ஆராய்ச்சி மணி கட்டியிருக்கும். நீதி கேட்டு மணியை அடிப்பவரின் பிரச்னையை கேட்டு நீதி வழங்குவார் மன்னர். அப்படிப்பட்ட மணி இக்கோயிலில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, குறைகளை ஒரு தாளில் மனு எழுதிக் கொண்டு, கோயிலை மூன்று முறை வலம் வந்து மணியை ஒலிக்கச் செய்வர். பின் அருகிலுள்ள பெட்டியில் மனுவைச் சேர்த்து விடுவர். மறுநாள் அதிகாலை பூஜையின் போது அர்ச்சகர் பக்தர்களின் மனுக்களை நடராஜர் முன்னிலையில் வாசிப்பார். விண்ணப்பித்த 41 நாட்களுக்குள் குறை நீங்கும் என்பது ஐதீகம்.