பதிவு செய்த நாள்
30
ஜூலை
2021
05:07
திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார். இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன். அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார். அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்..” என்று கூறி, முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.
வடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில். ஆம்… அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால் துடித்தார். சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும். முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்துகொண்டார்.
உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் ? என்று கேட்டார். அவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்கமுடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக்கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனிபெருங்கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது. முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப்பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் ‘லூசிங்க்டன் 1803′ என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803′ என்ற முத்திரையை இப்போதும் காணலாம்.