ஹனுமான், அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், விபீஷணன், மாபலி சக்ரவர்த்தி,வியாசர் . இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள். இவர்கள் எழுவரும் ஆலயம், பாதுகாப்பவர்கள். நாம் ஆலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம். அப்போதுஅந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம்.அதனால், கோவிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!
ஸ்ரீ ஆஞ்சனேயபிரபு சனீஸ்வரபகவானிடம் கூறியதாவது " எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! "என்று சொல்ல ஸ்ரீ சனீஸ்வரபகவானும் அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா என்று வாக்கு கொடுத்தார்.
சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்!
சனிபகவானும், வாயுகுமாரனும்: ராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் நடக்கும் துவாபரயுகம்! சஞ்சீவி மலையை கொண்டு வந்து அமரர்குலம் காத்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ஸ்ரீராமபிரானின் திருநாமத்தை ஜபித்தவாறு வாழ்ந்து வந்தார்.
வாயுகுமாரனான ஆஞ்சநேயர், சிவபெருமானின் அம்சம் ஆவார். சூரிய குமாரனான சனியோ, சிவபெருமானிடம் சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர். ஆஞ்சநேயர் மார்கழி திங்கள் மதிமறைந்த நந்நாள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரப்படி தனுர்ராசியில் சூரியனும், சந்திரனும் இருக்கின்ற சுபவேளையில் ஆஞ்சநேயர் அவதாரம் பண்ணினார்.
ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் சனிபகவான் 7 1/2 ஆண்டு காலம் அவரைப் பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சனிபகவான்! ஆஞ்சநேயர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ராமநாமத்தை ஜபிப்பதும், ஸ்ரீராமரை மலர் கொண்டு ஆராதிப்பதுமாக இருந்து வந்தார்.
ஆஞ்சநேயர் பூ பறிக்க மலர் வனம் புறப்படும்போது அவரைப் பிடிக்கலாம் என்று சனிபகவான் காத்துக் கொண்டிருந்தார். சனிபகவானின் எண்ணத்தை முன்னதாகவே தெரிந்து வைத்திருந்த அனுமன் சனிபகவானின் பிடியிலிருந்து தப்புவதற்கு உகந்த மார்க்கத்தைத் தெரிந்து வைத்திருந்தார்.
ஆஞ்சநேயர் திருமாளிகையின் மணிக்கதவைச் சற்று திறந்து தமது வாலை மட்டும் கொஞ்சம் வெளியே நீட்டினார். அவ்வளவு தான்! ஆஞ்சநேயரைப் பிடிக்க வெளியே நின்று கொண்டிருந்த சனிபகவான் இது தான் சமயம் என்று ஆஞ்சநேயர் வாலைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
சனி பகவானின் செயலைப் புரிந்து கொண்ட ஆஞ்சநேயர் முகம் மலர, சுவாமி! என்னை விட்டு விடுங்கள்! என்றார். அதற்கு சனிபகவான், ஆஞ்சநேயா! அது எப்படி முடியும்? 7 1/2 ஆண்டு காலம் உன்னை நான் பிடித்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்பது நியதியல்லவா? என்று கேட்டார். என் ராம ஜபத்துக்கும், பூஜைக்கும் உங்களால் ஊறு வரலாமா? ஈசுவர பட்டம் பெற்ற தேவரீர், ஈசுவர சொரூபமான இந்த எளியவனை விட்டு விலகுதல் தான் உசிதமானது; உத்தமமானது! என்றார் ஆஞ்சநேயர்!
இல்லை ஆஞ்சநேயா! இது என்னால் முடியாது. நான் அந்த ஈசுவரனையே பிடித்துள்ளேன். பூவுலகில் வாசம் என்று வந்துவிட்டால் கிரகங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். இது ஜோதிடத்தின் தீர்ப்பு! எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை.
எனக்கு என் ஸ்ரீராமச்சந்திர பிரபு தான் முக்கியம்! இதில் எவ்வித மாற்றமும் இல்லை! தங்கள் பிடியிலிருந்து எப்படி தப்புவது என்பது எனக்குத் தெரியும்! ஆஞ்சநேயர் ஆணித்தரமாகக் கூறினார். இவ்வாறு சனிபகவானிடம் தமது முடிவைத் திடமாகச் சொன்ன ஆஞ்சநேயர். ஆனந்தம் தாங்காமல் வாலை சுழற்றி, சுழற்றி துள்ளிக்குதித்து ராமநாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டு, ஆடத்தொடங்கினார்.
ஆஞ்சநேயரின் வாலைப் பிடித்துக் கொண்டிருந்த சனி பகவான் வாலைப் பிடிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். வாலின் நுனியில் அமர்ந்திருந்த சனிபகவான் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
அவர் ஆஞ்சநேயரிடம், வாயு குமாரா! நீ எப்போது உனது பஜனையை நிறுத்தப் போகிறாய்? என்று கேட்டார். ஸ்ரீராம நாம சங்கீர்த்தனத்தை நிறுத்துவதா? நன்றாக கேட்டீர்களே ஒரு கேள்வி! சிரித்துக் கொண்டே சொன்னார் ஆஞ்சநேயர்! துள்ளிக் குதிக்கிறாயே! அதை எப்போது நிறுத்துவாய்? என்று கேட்டேன்? நீர் எம்மை எத்தனை ஆண்டுகள் பிடிப்பதாக உத்தேசம்? ஏழரை ஆண்டுகள். அப்படியானால் நானும் ஏழரை ஆண்டுகாலம் குதித்துக் கொண்டே இருப்பேன்! ஆஞ்சநேயரின் முடிவு சனிபகவானுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சனி பகவான் தமக்குள் ஓர் முடிவிற்கு வந்தார்.
இவரை விட்டு விடுவோம் ! ஏழரை ஆண்டுகள் நான் பிடிப்பேன் என்ற அச்சத்தில் ஆஞ்சநேயர் இருக்கிறார்? இந்த பய உணர்வே நான் ஏழரை ஆண்டுகாலம் அவரைப் பிடித்ததற்குச் சமம்! என்று எண்ணியவராய் ஆஞ்சநேயர் வாலை விட்டு கீழே இறங்கினார். நீயோ அந்த ஈசனால் சனிபகவான் என்ற பட்டத்தைப் பெற்றவன். அதுமட்டுமல்ல; உன் தந்தையான சூரிய பகவான் என் குருதேவர்! இப்படி நாம் இருவருமே அந்த ஈசுவரனின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்பதனை நீ உணர்வாய்! என்றார். ச்ருதகர்மா! எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா! என்றார் சனிபகவான்! எல்லா சிவன் கோவில்களிலும் சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்.