பதிவு செய்த நாள்
19
ஆக
2021
04:08
ஸ்கந்த புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகிமையை சிவபெருமான் விளக்குகிறார். சுமங்கலிகளால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் மற்றும் மங்கலத்தின் இருப்பிடமாக மகாலட்சுமி விளங்குகிறாள். அறிவுசார்ந்த, நற்குணமுள்ள மக்கட்பேறு, கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி மகாலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்த விரதத்தன்று நீராடி, புத்தாடை அல்லது தூய ஆடை உடுத்த வேண்டும். தாமரை கோலம் வரைந்து, அதன் நடுவில் தேர் வடிவ சிற்பம் அல்லது பலகை வைக்கவேண்டும். புது அரிசி, மாவிலை, தேங்காயுடன் கூடிய ஒரு கலசத்தை அதில் வைத்து மகாலட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். குடத்தில் இருக்கும் புது அரிசி, எதிர்கால வளர்ச்சியையும், சுபிட்சத்தையும் குறிப்பதாகும். கலசத்துக்கு பூஜை செய்த பிறகு, கணேச பூஜையும், பிறகு மங்கல சூத்திரமான மாங்கல்ய பூஜையும் நடத்த வேண்டும். வரலட்சுமி பூஜையின் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ரட்சை(காப்பு) கட்டுவது தான்.
பூஜை முடிந்த பின், குங்குமம், மஞ்சள்கயிறு, பூ , வஸ்திரம் முதலிய மங்கல திரவியங்களை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுப்பர். உணவும் வழங்குவர். லட்சுமிதேவி தன் பக்தர்களுக்கு பொருள் வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும் அருள்கிறாள். அவள் வித்யாசக்தியாக இருந்து, நல்ல கல்வியும் தருகிறாள். தன் பக்தர்களை பகவான் விஷ்ணுவுக்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்களது முக்திக்காக அவரிடம் சிபாரிசு செய்கிறாள். பகவான் விஷ்ணு அல்லது ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் சக்தியே மகாலட்சுமி. அழகு, கருணை, அழகான இயற்கைக் காட்சி, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் எல்லாமே அவளது தோற்றங்கள். லட்சுமிதேவி இல்லாமல் சந்நியாசிகள் கூட தங்கள் ஆஸ்ரமத்தையோ, பிரசாரத்தையோ நடத்த முடியாது. இல்லறத்தாரைக் காட்டிலும் அவர்களுக்குத் தான் லட்சுமி தேவி அதிகம் தேவைப்படுகிறாள். ஏனெனில், மக்கள் நன்மைக்காக அவர்கள் பெரும் தொண்டு செய்ய வேண்டியுள்ளது. ஆதிசங்கரர் தேவியையும், லட்சுமியையும், சரஸ்வதியையும் தமது பணியில் வெற்றிக்காக வழிபட வேண்டி நேரிட்டது. கடந்த காலத்தில் பெரும் ஆன்மிகப்பணி ஆற்றிய பெருமக்களும் இறை தூதர்களும் அன்னை லட்சுமிதேவியையும், சரஸ்வதியையும் ஆராதித்தவர்களே ஆவர். அன்னை மகாலட்சுமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாளாக! அவளது மந்திரத்தை நாம் பாராயணம் செய்வோம்.
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்!