பதிவு செய்த நாள்
24
மார்
2022
09:03
வியாழக்கிழமையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி நாம் செய்யும் பூஜைகளுக்கு மும்மடங்கு பலன்கள் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது மிக மிக வலிமையான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்னதான காலம் பிரம்ம முகூர்த்த காலம் என்று போற்றப்படுகிறது. தினமும் எந்தக் கிழமையாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது சிறப்பு வாய்ந்தது என்கிறது தர்ம சாஸ்திரம். அதனால்தான் படிக்கிற மகன் அல்லது மகளை ‘நைட்ல படிக்க வேணாம், நிம்மதியா தூங்கு. அதிகாலைல எழுப்பி விடுறேன். அப்போ படி’ என்பதெல்லாம் வழக்கமானது. அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்னதாக நாம் செய்யும் விஷயங்கள், நமக்கு இன்னும் இன்னுமான பலன்களைக் கொடுப்பவை. கல்வி கற்பதற்கும் மூச்சு முதலான யோகா பயிற்சி செய்வதற்கும் உகந்த காலம் இது என்கிறார்கள்.
அதேபோல், தூங்கி எழுந்து மனமானது தெளிவுடனும் சலனமில்லாமலும் இருக்கின்ற பிரம்ம முகூர்த்த வேளையில், நாம் கற்கும் விஷயங்கள், வெகு அழகாக நம் புத்திக்குள் உட்கார்ந்துகொள்ளும் பிரம்ம முகூர்த்தம் என்பது விசேஷமானது. பிரம்ம முகூர்த்தத்தில் மந்திரங்கள் சொல்வதோ வேத பாராயணங்கள் செய்வதோ பூஜைகள் மேற்கொள்வதோ மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும் வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். வியாழக்கிழமையில், பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகிற அதிகாலை 4.30 மணியில் இருந்து 5 மணிக்குள் அல்லது ஐந்தரை மணிக்குள், வீட்டில் விளக்கேற்றி கிழக்கு முகமாக அமர்ந்துகொள்ளலாம். அல்லது பூஜையறையில் சுவாமி படங்களைப் பார்த்தபடி அமர்ந்து கொள்ளலாம். முதலில் மகா கணபதி குறித்த ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு, பின்னர் குரு வந்தனம் சொல்லி, நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களை உச்சரித்து வழிபடலாம். வியாழன் என்றில்லாமல் எல்லா நாளுமே பிரம்ம முகூர்த்த வேளையில் வழிபடுவதும் பிரார்த்தனைகள் மேற்கொள்வதும் இதுவரை இருந்து வந்த சிக்கல்களையெல் லாம் தீர்த்து வைக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் முதலான தெய்வங்களை வணங்கலாம். ஸ்ரீரமணர், ஸ்ரீமகா பெரியவா, பாம்பன் சுவாமிகள், பகவான் ராகவேந்திரர், பகவான் யோகி ராம்சுரத்குமார், ஸ்ரீசாயிபாபா உள்ளிட்ட எண்ணற்ற மகான்களையும் வழிபடலாம். மனதார வேண்டிக்கொள்ளலாம். வியாழக்கிழமையில்... பிரம்ம முகூர்த்தத்தில் மகான்களை வேண்டுவோம். மனதாரப் பிரார்த்திப்போம். தடைகளைத் தகர்த்து அருளுவார்கள். இன்னல்களைப் போக்கி அருளுவார்கள்.