பதிவு செய்த நாள்
25
மார்
2022
02:03
இன்று தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும். காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. ஞாயிறன்று ராகுவேளையில் (மாலை 4.30-6 மணிக்குள்) வழிபடுவர். எதிரி பயம், மனக்குழப்பம், கடன்தொல்லை, தொழிலில் பிரச்னை, திருஷ்டி தோஷம் நீங்க இவரை வழிபடுவர். "கால என்றால் "கருப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். சிவனுக்கு "காலகண்டன் என்ற பெயருண்டு. விஷம் குடித்ததால் கருநீல நிற கழுத்தைக் கொண்டவர் என்பது இதன் பொருள். பைரவரும் கரியவரே.
பைரவர், வீரபத்திரர், க்ஷத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் ÷க்ஷத்ர பாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.
அம்மையை தடுக்க அஷ்டமி படிப்பு: அஷ்டமி திதியன்று அம்பாள் கதை படித்தாலோ, கேட்டாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அந்நாளில் அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்றுசேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிக்கலாம்.