பதிவு செய்த நாள்
13
ஜூன்
2022
04:06
* முருகப்பெருமானை வழிபட்டால் காமம், குரோதம் உள்ளிட்ட தீய பண்புகள் மறையும். இதனையே அசுரர்களாக (சூரபத்மன், தாரகாசுரன்) சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
* சுப்பிரமண்ய அஷ்டகத்தை செவ்வாய் அன்று படித்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
* முருகனுக்கு வலதுபுற கைகளில் கோழிக்கொடி, வச்சிராயுதம், அங்குசம், அம்பு, வேல் ஆகிய ஆயுதங்களும், இடப்புற கைகளில் தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகிய ஆயுதங்களும் இருக்கும்.
* கந்த புராணத்தில் உள்ள சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் படித்தால் பாவம் பறந்தோடும்.
* முருக வழிபாட்டுக்கு ஏற்ற திதி சஷ்டி, நட்சத்திரம் கார்த்திகை, கிழமை செவ்வாய்.
* முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் ‘காங்கேயன்’ என பெயர் பெற்றார். சரவணப் பொய்கையில் அவதரித்ததால் ‘சரவண பவன்’ எனப்பட்டார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பராசக்தியால் ஆறு உருவமும் ஒரே வடிவமாக ஆக்கப்பட்டதால் ‘கந்தன்’ என்றும் பெயர் பெற்றார்.
* ‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்’ எனப் பாடியவர் அருணகிரிநாதர்.
* முருகனின் கையில் உள்ள வேலுக்கு ஞானசக்தி என்றும் பெயருண்டு.
* திருஞானசம்பந்தராக பூமியில் அவதரித்தவர் முருகப்பெருமானே என்பர்.
* தமிழகத்தில் முருகனுக்கு குடவரை கோயில்கள் உள்ள தலங்கள் திருப்பரங்குன்றம், கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான் மலை, சித்தன்னவாசல், வள்ளிக்கோயில், மாமல்லபுரம்.
* மலைக்கோயில்களில் குடிகொண்டுள்ள முருகனை ‘சிலம்பன்’ என்று குறிப்பிடுவர்.
* விசாகன் என்றும் முருகன் அழைக்கப்படுகிறார். இதற்கு ‘மயிலில் சஞ்சரிப்பவன்’ என்பது பொருள்.
* முருகனுக்கு உகந்த பூக்கள் கடம்ப மலர், முல்லை, சாமந்தி, ரோஜா, செங்காந்தள்.
* முருகன் சன்னதியை ஒருமுறை சுற்றி வந்து வணங்கினால் போதும்.
* முருகனுக்காகக் கட்டப்பட்ட முதல் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஒற்றைக் கண்ணுாரில் உள்ளது. முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு ஒரு கையில் ஜப மாலையும், மறு கையில் சின்முத்திரையும் காட்டியபடி முருகன் இருக்கிறார். வாகனமாக யானை இங்குள்ளது.
* ஆதிசங்கரர் உருவாக்கிய ஆறுவகை வழிபாட்டு முறைகளில் முருக வழிபாடு ‘கவுமாரம்’ எனப்படும்.
* படைப்புக் கடவுளான பிரம்மாவை சிறையில் அடைத்தார் முருகன். இதனால் அவரே அத்தொழிலை மேற்கொண்டார். இதை உணர்த்தும் விதமாக திண்டுக்கல் – மதுரை செல்லும் சாலையில் 10 கி.மீ., துாரத்திலுள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் நான்கு முகம் கொண்டவராக முருகன் இருக்கிறார்.
* ஆறு தீப்பொறிகளாக அவதரித்த முருகன் கங்கை நதியால் சுமக்கப்பட்டதால் ‘காங்கேயன்’ எனப்பட்டார்.
* சிவன், பார்வதிக்கு நடுவில் முருகன் இருக்கும் கோலத்தை ‘சோமாஸ்கந்த மூர்த்தி’ என அழைப்பர்.
* முருகப்பெருமானுக்காக சூரபத்மனிடம் துாதுவராகச் சென்றவர் வீரபாகு.
* முருகன் மீது ஸ்கந்தகுரு கவசம் பாடியவர் சாந்தானந்தர்.
* தக்க சமயத்தில் பக்தர்களுக்கு அருள்புரிபவர் என்பதால் முருகனை ‘வேளைக்காரன்’ என்பார்கள்.
* படைவீடுகளில் மூன்றாவதாக கருதப்படுவது பழநி.
* திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் எனப்படும் தலம் திருச்செந்துார்.
* திருச்செந்துார் முருகன் மீது பாடப்பட்ட திருப்புகழ் பாடல்கள் 83.
* முருக வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால் குமார தந்திரம்.
* முருகன் மீது கந்தரலங்காரம் பாடியவர் அருணகிரிநாதர்.
* ஆறுபடை வீட்டில் மலை இல்லாத தலம் சுவாமிமலை.
* திருப்புகழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 1300.
* முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழைப் பாடியவர் குமரகுருபரர்.
* திருத்தணி முருகனுக்கு மார்கழியில் வெந்நீரால் அபிஷேகம் செய்வர்.
* திருச்செந்துாரில் ஜெயந்தி நாதர், குமர விடங்கர் என இரண்டு உற்ஸவர்கள் உள்ளனர்.
* சுவாமிமலையின் புராணப்பெயர் திருவேரகம்.
* கர்நாடக மாநிலத்தில் முருகனை நாக சுப்பிரமணியர் என பாம்பு வடிவில் வழிபடுகின்றனர்.
* அவ்வையாருக்கு நாவல்கனியைத் தந்தவர் முருகன். அந்த தலத்தின் பெயர் சோலைமலை.
* அகத்தியருக்கு முருகன் உபதேசித்த இடம் பொதிகை மலை (திருநெல்வேலி மாவட்டம்)
* ஆறுபடை வீடுகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மலை சுவாமிமலை. இங்குள்ள படிகளின் எண்ணிக்கை 60.
* முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நிகழ்ந்த தலம் திருப்பரங்குன்றம்
* சுக்கிர தோஷம் போக்குபவராக திருத்தணி முருகன் திகழ்கிறார்.
* கந்த புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலம் காஞ்சிபுரம் குமரகோட்டம்.