ரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கவிமானம் எனப்படும் கருவறை, முற்காலத்தில் அயோத்தியில் ஸ்ரீராமசந்திரமூர்த்தியின் முன்னார்களால் ஆராதிக்கப்பட்ட பெருமை கொண்டதாகும், இக்ஷ்சவாகு எனும் மன்னனால் பிரம்மாவின் சத்தியலோகத்திலிருந்து இப்பூவுலகத்திற்கு வந்த இந்த ஸ்ரீரங்கவிமானம், வீபீஷணன் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கிணங்கராமபிரானால் கொடுக்கப்பட்டதாகும். எனவேதான் இந்த ரங்கவிமானம், இக்ஷ்சவாகுவின் குலதனம் என்றே இன்றும் குறிக்கப்படுகிறது.
துவக்கத்தில் கல்மண்டபமாக இருந்த இந்த ரங்கவிமானத்திற்கு திருமங்கையாழ்வார்தான் நாகப்பட்டினத்திலிருந்த வேறுசமயத்தைச் சேர்ந்த ஒரு துறவியின் தங்க விக்கிரகத்தைக் கொணர்ந்து அதில்கிடைத்த தங்கத்தைக் கொண்டு பொன்வேய்ந்ததாகக் கூறப்படுகிறது. இது பிரணவாக்ருதி விமானம் என்று அழைக்கப்படுகிறது, வேதச்ருங்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. வானிலிருந்து இந்த கோபுரத்தைப் பார்த்தால் ‘ஓம்’ எனும் பிரணவ வடிவம் தெரியும் என்பதால் பிரணவாக்ருதி விமானம் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களே நான்கு கலசங்கள் இருப்பதால் இதற்கு வேதச்ருங்கம் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்ரீரங்க விமானத்தின் நான்கு திசைகளிலும் அச்சுதன். அனந்தன், கோவிந்தன், மற்றும் பரவாசுதேவர் எனும் திருமாலின் நான்கு முக்கிய வடிவங்கள் வடிவமைக்கப்பட்டு சேவை சாதிக்கின்றனர்.