ஸ்ரீரங்கம் ரங்காநாதர் கோயிலில் 54 சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளுக்கெல்லாம், அன்றாட பூஜைக்குத் தேவையான நிவேதனம் தயாரிப்பதற்கான அரிசி, பருப்பு, நெய், வெல்லம் உள்ளிட்ட அனைத்து மளிகைச் சாமான்களும் இங்குதான் பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வாரு சன்னதிக்கும், அர்ச்சகரோ அல்லது மடைப்பள்ளி சிப்பந்தியோ தினமும் காலையில் இங்கு வந்து அந்தந்த சன்னதிக்குண்டான படித்திட்டத்தை இங்குள்ள கணக்கரிடம் கூறி பெற்றுச் செல்வது இன்றளவும் இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. உபயதாரர்கள் காணிக்கையாக பெருமாளுக்கு சமர்ப்பிக்கும் உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் யாவும் இத்திருக்கொட்டாரத்திலேயே சேமிப்பில் வைக்கப்படுகின்றன. இது தவிர கோயில் நிலங்களில் விளையும் பெருமளவிலான நெல் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்க இங்கு அளவில் பெரிய குதிர் போன்ற அமைப்புகள் உள்ளன. அனைவருக்கும் படியளக்கும் தான்யலட்சுமிக்கு இக்கொட்டாரத்தில் தனியாகச் சன்னதி இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஏழாம் திருநாள் புறப்பாட்டின்போது, உற்சவர் நம்பெருமாள், உபயநாச்சியார்சகிதம் இந்த கொட்டாரத்திற்கு வந்து நெல் அளவை கண்டருள்வது இன்றளவும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின்போது பெருமாள் கொட்டாரத்தில் இருக்கும் பொருட்களின் தரம் மற்றும் அளவுகளை சரிபார்ப்பதோடு, இருப்பு மற்றும் தேவை குறித்து கணக்கெடுத்துச் செல்வதாகவும் ஐதீகம்.