வைணவத்தில், பெருமாளை தரிசிக்கும்போது பாதத்தில் துவங்கி திருமுக மண்டலத்தை தரிசிப்பது மரபு. அதிலும் பெருமாளின் திருவடிகளுக்கு தனிப்பெருமை உண்டு. இன்றும் பெருமாள் கோயிலில் திருவடி சேவைக்கே உயர் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் கருவறை சுவரிலிருந்து, அடுத்தடுத்த பிரகாரங்கள் ஒவ்வொன்றிலும், கருவறையில் திருவடி இருக்கும் இடத்தைகுறிப்பால் உணர்த்தும் வகையில், திருவடிச்சாயல்கள் எனப்படும் பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோயில் முதல் பிரகாரத்தில் ஸ்ரீரங்கவிமானத்தின் சுவற்றில் தங்கத்தால் ஆன திருவடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ள ராஜமகேந்திரன் திருச்சுற்றில் சேனை முதலியார் சன்னிக்கு எதிரில் சிறியதொரு நான்குகால் மண்டபத்தில் பித்தளை தகடுகள் போர்த்திய திருவடிச்சாயல்களை நாம் சேவிக்கலாம். மூன்றாம் பிரகாரம் எனப்படும் குலசேகரன் திருச்சுற்றில் மடைப்பள்ளி அருகே கல்லினால் ஆன திருவடிச்சாயலை சேவிக்கலாம், நான்காம் பிரகாரத்தில் மணல்வெளியில் சிறிய மண்டபத்திலும், ஐந்தாம் பிராகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகிலும், ஆறாம் பிரகாரம் எனப்படும் உத்தரவீதியில் யானைக்கூடம் அருகிலும் திருவடிச்சாயலை நாம் சேவிக்கலாம். இந்த திருவடிச் சாயல்கள் ஸ்ரீரங்கத்திற்கு கிழக்கே சுமார் 40 மைல் தூரம்வரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்ததாகவும், அவை காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் ‘காணாமல்’போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.