மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு எண்ணமொன் றின்றியிருக்கும் ஏழை மனிசர்காள்! கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே! நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்!
நாம் பிறப்பதும் மண்ணில்தான். பின் வாழ்ந்து, இறந்து முடிந்த பின்பு நம்மைப் புதைப்பதும் மண்ணில்தான். மண்ணோடு மண்ணாகப் போகும் மனிதர்கள் பெயரை குழந்தைகளுக்கு இடுகின்றோம். இதனால் மனிதப் பெயர்களும் மறைகின்றன. நாமும் இறந்தபின் நரகமே புகுகிறோம். ‘நரகம் புகாமல் இருக்க வேண்டுமா?’ கண்ணுக்கு இனிமையும், குளிர்ச்சியும் தரும் அழகிய கார்மேக வண்ணனின் (பெருமாள்) திருப்பெயர்களுள் (நாராயணா, கோவிந்தா, கேசவா, மாதவா, கண்ணா) ஏதேனும் ஒன்றினை குழந்தைக்கு இடுங்கள். இதனால் குழந்தையைப் பெற்ற அன்னையும் நரகம் புகமாட்டாள். நீங்களும் நரகம் புகமாட்டீர்கள். எனவே குழந்தைகளுக்கு தெய்வப்பெயர்களையே சூட்டுவோம் என உரைக்கிறார் பெரியாழ்வார்.