ஆடிப்பூரம்; அம்மனுக்கு வளை காப்பு நடக்கும் நாள்.. அம்பிகையை வழிபட நல்லதே நடக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2023 10:07
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள். ஆடிப்பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். இன்று ஆண்டாளை வழிபட வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும். ஆடிப்பூரத்தன்று அம்பிகையை வழிபட்டால் மனநிம்மதியுடன் வாழலாம்.
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.