ஆவணி அவிட்டத்தன்று அணியப்படும் பூணுாலின் மகிமையைத் தெரிந்து கொள்ளுங்கள். பூணுால் திரிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர். ஒருநாள் அவரது மனைவி, “நீங்கள் எப்போதும் பூணுால் திரித்தால் எப்படி குடும்பம் நடக்கும்? மன்னரிடம் சென்று ஏதாவது உதவி கேளுங்கள்” என வற்புறுத்தினாள். மன்னரிடம் சென்று “நான் ஒரு பூணுால் கொண்டு வந்திருக்கிறேன். அதற்கு எடைக்கு எடை மட்டும் தங்கம் கொடுங்கள்” என தானம் கேட்டார். தராசு தட்டில் பூணுால் ஒருபுறமும், தங்க காசு மறுபுறமும் வைக்கப்பட்டது. எத்தனை காசுகள் வைத்தும் ஈடாகவில்லை. பூணுால் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. இதைக் கண்ட அமைச்சர், நாளை வாருங்கள். தருகிறோம் என்று அனுப்பினார். அந்தணருக்கு ஒரே பயம். பூணுாலை வைத்து மாயமந்திரம் செய்ததாக மன்னர் நினைப்பாரோ என கலங்கினார். இந்த பயத்தில் துாக்கம் வரவில்லை. மறுநாள் வழக்கமான நியமங்களைச் செய்யாமல் பயத்துடன் அரண்மனைக்கு வந்தார். தராசில் பூணுால் வைக்கப்பட்டது. ஒரு காசை வைத்தவுடன் தட்டு தாழ்ந்தது. அதை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். இதையறிந்த மன்னர் ஆச்சரியத்துடன், “நேற்று நிறைய தங்கக்காசுகள் வைத்தும் தாழாத தராசு, இன்று ஒரே காசுக்கு தாழ்ந்தது எப்படி” எனக் கேட்டார். மன்னா... பூணுால் புனிதமானது. அந்தணர் நேற்று அன்றாட நியமங்களைச் செய்து விட்டு வந்தார். அதனால் பூணுாலுக்குரிய மதிப்பு அபரிமிதமாக இருந்தது. இன்று பயத்தில் நியமங்களைச் செய்ய மறந்தார். இதனால் ஒரு காசுக்குத் தான் அதன் மதிப்பு தேறியது” என்றார். வாழ்க்கை முறையை ஒருவனுக்கு உபதேசிப்பது தான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது ஞானமாகிய மூன்றாவது கண்ணைத் திறப்பதாகும். அப்போது அணிவிக்கப்படும் பூணுால் மிக புனிதமானது. வாமன மூர்த்திக்கு விசேஷமாக உபநயனம் நடத்தப்பட்டது. சூரியபகவானே வந்து குழந்தை வாமனனுக்கு காயத்ரி மந்திர உபதேசம் செய்தார். வாமன மூர்த்தி ஏன் பூணுால் அணிய வேண்டும்? பூலோகத்தில் உள்ள நாமும் சமஸ்காரங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே. வாமனரை வழிபட்டால் குழந்தைகளுக்கு சீக்கிரமாக உபநயனம் நடத்தும் பாக்கியம் கிடைக்கும். பூணுால் அணிவதை சடங்காக கருதாமல் அதன் நியமங்களைப் பின்பற்றுவதில் தான் புனிதம் காக்கப்படும் என்பதை உணர்வோம்.