Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்புகழ் பகுதி-9 திருப்புகழ் பகுதி-11 திருப்புகழ் பகுதி-11
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-10
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
05:03

476. கடத்தைப்பற் றெனப்பற்றிக்
கருத்துற்றுக் களித்திட்டுக்
கயற்கட்பொற் பிணைச்சித்ரத்  தனமாதர்
கலைக்குட்பட் டறக்கத்திச்
சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்
திரைக்குட்பட் டறச்செத்திட்  டுயிர்போனால்

எடுத்துக்கொட் டிடக்கட்டைப்
படத்தெட்டத் தணற்றட்டக்
கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற்  றவர்போமுன்
இணக்கிப்பத் திமைச்செச்சைப்
பதத்தைப்பற் றுகைக்குச்சொற்
றமிழ்க்கொற்றப் புகழ்ச்செப்பித்  திரிவேனோ

அடைத்திட்டுப் புடைத்துப்பொற்
பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்
டலைப்புப்பற் றெனச்சொற்றிட்  டறுசூரை
அடித்துச்செற் றிடித்துப்பொட்
டெழப்பொர்ப்புப் படக்குத்திட்
டலைத்துச்சுற் றலைத்தெற்றுக்  கடல்மாயப்

புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்
கயிற்கொக்கைப் படக்குத்திப்  பொருவோனே
புனத்திற்பொற் குறத்திக்குப்
புணர்க்கொத்தப் பசப்பெத்திப்
புணர்க்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.

477. கருப்பற்றிப் பருத்தொக்கத்
தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்
கருத்திற்கட் பொருட்பட்டுக்  பயில்காலங்
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக்
கதித்திட்டுக் கொதித்திட்டுக்
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச்  சமனாவி

பெருக்கப்புத் தியிற்பட்டுப்
புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்
பிணத்தைச்சுட் டகத்திற்புக்  கனைவோரும்
பிறத்தற்சுற் றமுற்றுற்றிட்
டழைத்துத்தொக் கறக்கத்துப்
பிறப்புப்பற் றறச்செச்சைக்  கழல்தாராய்

பொருப்புக்கர்ப் புரக்கச்சுத்
தனப்பொற்புத் தினைப்பச்சைப்
புனக்கொச்சைக் குறத்தத்தைக்  கினியோனே
புரத்தைச்சுட் டெரித்துப்பற்
றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்
புணர்த்தப்பித் தனைக்கற்பித்  தருள்வோனே

செருக்கக்குக் கரைக்குத்திச்
செருப்புக்குப் பிடித்தெற்றிச்
சினத்திட்டுச் சிதைத்திட்டுப்  பொரும்வீரா
திருத்தத்திற் புகற்சுத்தத்
தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்
திருக்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.

478. கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
பிறக்கிட்டுப் படக்கற்பித்  திளைஞோர்தங்
கழுத்தைச்சிக் கெனகட்டித்
தனச் செப்புப் படக்குத்திட்
டுருக்கிக்கற் பழிக்கப்பொற்  பெழு காதல்

புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
பணிக்கட்டிற் புறத்துற்றுப்  புணர்மாதர்
பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்
பதத்தைப்பெற் றிருக்கைக்குப்   பெறுவேனோ

திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
கரிக்குப்புத் திரற்குற்றுத்  தளைபூணச்
சினத்துப்பொற் பொருப்பைப்பொட்
டெழுத்தித்திக் கரித்துப்புத்
திரத்தத்திற் சிரித்துற்றுப்  பலபேய்கள்

பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
பரப்பொய்க்கட் டறப்புக்குப்  பொருதோனே
பணிச்செச்சைத் தொடைச்சித்ரப்
புயத்துக்ரப் படைச்சத்திப்
படைக்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.

479. அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே.

480. முட்டுப் பட்டுக்  கதிதோறும்
முற்றச் சுற்றிப்  பலநாளும்
தட்டுப் பட்டுச்சுழல்வேனைச்
சற்றுப் பற்றக்  கருதாதோ
வட்டப் புட்பத்  தலமீதே
வைக்கத் தக்கத்  திருபாதா
கட்டத் தற்றத்   தருள்வோனே
கச்சிச் சொக்கப்  பெருமாளே.





481. அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத்  தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக்  குடில்பேணிச்

செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப்  பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக்  கழல்தாராய்

துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப்  பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக்  கினியோனே

கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக்  களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிப் சொக்கப்  பெருமாளே.

482. சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட்  டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத்  துறைநாடி

பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப்  பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத்  தளர்வேனோ

அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப்  பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத்  தொடைசூழ்வாய்

கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
கைத்தச் சத்திப்  படையேவுங்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப்  பெருமாளே.

483. கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற்  றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற்  பலபாஷை

திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச்  சுமைபேணும்
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப்  பெறுவேனோ

அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப்  பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத்  தடைவாகத்

தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற்  கணமாடிச்
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப்  பெருமாளே.

484. தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக்  கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப்   பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற்  றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத்  தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப்  பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக்  கினியோனே

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித்  திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற்  பெருமாளே.

485.பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக்  குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக்  கிரியார்தோய்

துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச்  சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப்  பெறுவேனோ

திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப்  பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
செச்சைத்கொத் தொப்பித்  தணிவோனே

கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
கட்கத்தத் தர்க்குப்  பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட் சொக்கப்  பெருமாளே.

486. அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
கணுரத்தைக் கனவெற்புத்  தனமேகம்
அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்
திளகிக்கற் புளநெக்குத்  தடுமாறித்

துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
தொடியர்க்கிப் படியெய்த்துச்  சுழலாதே
சுருதிப்பொற்பொருள் செக்கர்க்குரவிட்டுத்தமர்பற்றித்
தொழுசெச்சைக் கழல்பற்றிப்  பணிவேனோ

புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
புனமுத்தைப் புணர்சித்ரப்  புயவீரா
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
புகல்பொற்குக் குடவெற்றிக்  கொடியோனே

கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
கரணிச்சித் தருள்கச்சிப்  பதியோனே
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
பொருசத்திக் கரசொக்கப்  பெருமாளே.

487. கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன்  மலராலும்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு  மதனாலும்

பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல  இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது  தரவேணும்

பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி  லுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல  கதிர்வேலா

இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய  திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த  பெருமாளே.

488. கமலரு சோகாம்பர மடிநடு வேய்பூங்கணை
கலகமலர் வாய்தோய்ந்தம  ளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
கனவிய வாரேந்தின  இளநீர்தோய்ந்

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு  மநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய  மருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பர  மறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி  லுறைவோனே

விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர  னகர்வாழ
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற மேல்வாங்கிய  பெருமாளே.

489. கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத்  தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக்  கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக்  கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப்   புகல்வாயே

தரும வீமஅ ருச்சுன நகுலச
காதே வர்க்குப்  புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட்   டினிலாளுங்

குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத்  ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப்  பெருமாளே.

490. கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய  பொறியார்பைங்
கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு  வடமாடச்

சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி  சுழலாடத்
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய  ருறவாமோ

திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி  சிவகாமி
திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை  யருள்பாலா

அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர  முடையோனே
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் கண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய  பெருமாளே.

491. கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற்  செயல்மாறித்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப்  புறவாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ  எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக்  கமறாதோ

நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக்  குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற்  பொருதோனே

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத்  தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

492. கோவைச் சுத்தத் துப்பத ரத்துக்  கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத்  தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித்  திரியாதே
பாடப் பத்திச் சித்தமெ னக்குத்  தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப்  பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக்  கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப்  பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப்  பெருமாளே.

493. சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூடு வேகளித்  தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக்  கறியாமற்

பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித்  தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித்  தருள்வாயே

தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த்  தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்  குருநாதா

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்  புலிவேளூர்
காள அத்தியப் பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற்  பெருமாளே.

494. நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்க  மதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடு முழங்கு
நத்திரைவ ழங்கு  கடலாலும்

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து  மெலியாதே
எத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச  லெனவேணும்

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்கு  முறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்த  கழலோனே

கச்சிவர்கு ரும்பை கச்சவர்வி ரும்பு
கச்சியில மர்ந்த  கதிர்வேலா
கற்பகவ னங்கொள் கற்பகவி சும்பர்
கைத்தளைக ளைந்த  பெருமாளே.

495. படிறொ ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட  னொடிபேசும்
பகடி கட்குள மகிழ  மெய்ப்பொருள்
பலகொ டுத்தற  உயிர்வாடா

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட  மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத  மருள்வாயே

கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி  லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி  திருமார்பா

பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர்  குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய  பெருமாளே.

496. மகுடக்கொப் பாடக் காதினில்
நுதலிற்பொட் டூரக் கோதிய
மயிரிற்சுற் றோலைப் பூவொடு  வண்டுபட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
மிதழிற்சொற் சாதிப் பாரியல்
மதனச்சொற் பாடுக் கோகில  ரம்பைமாதர்

பகடிச்சொற் கூறிப் போர்மயல்
முகவிச்சைப் பேசிச் சீரிடை
பவளப்பட் டாடைத் தோளிரு  கொங்கைமேலாப்
பணமெத்தப் பேசித் தூதிடு
மதியச்சுத் தீனச் சோலிகள்
பலரெச்சிற் காசைக் காரிகள்  சந்தமாமோ

தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித் தீதித் தோதிமி
தடுடுட்டுப் டாடப் பேரிகை  சங்குவீணை
தடமிட்டுப் பாவக் கார்கிரி
பொடிபட்டுப் போகச் சூரர்கள்
தலையிற்றிட் டாடப் போர்புரி  கின்றவேலா

திகரிப்பொற் பாணிப் பாலனை
மறைகற்புத் தேளப் பூமனை
சினமுற்றுச் சேடிற் சாடிய  கந்தவேளே
தினையுற்றுக் காவற் காரியை
மணமுற்றுத் தேவப் பூவொடு
திகழ்ச்சித் தேவக் கோன்மகிழ்  தம்பிரானே.

497. மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது  மனதாலே
மட்டிட்டுத் தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதி  மதிசூடும்

முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண  மானது  பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவது  புரிவாயே

செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல்  வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக  முதுசோரி

கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாபர யோதர  முலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய  பெருமாளே.

498. மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
வசைபேசு கின்ற  மொழியாலும்
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
மதிநேரு கின்ற  நுதலாலும்

அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை  வளையாலும்
அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
அடியேன்ம யங்கி  விடலாமோ

மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
வலமாக வந்த  குமரேசா
மறிதாவு செங்கை அரனாரி டங்கொள்
மலைமாது தந்த  முருகேசா

நயவா னுயர்ந்த மணிமாட மும்பர்
நடுவேநி றைந்த  மதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த  பெருமாளே.

499. முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர்  வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர்  நகையாலே

எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட முற்ற கூட்டர்  விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம்  உழல்வேனோ

தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை  தவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்தி  விடும்வேலா

கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர்  குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள்  பெருமாளே.

500. வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத்  திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற்  றருளாலே

தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக்  கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக்  கருதாதோ

வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப்  படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்கிச் சித்ரத்  திருமார்பா

கம்ப ராய்ப்பணி மன்னுபு யம்பெறு
கைக்குக் கற்புத்  தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப்  பெருமாளே.

501. வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லூர்ந்துற்பல வோடையில் நீடிய  உகள்சேலை
வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய  விழியாலே

சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி மீதினி லேசிறி  தறிவாலே
சாந்தப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
மாய்ந்திப்படி போகினு மோர்மொழி  மறவேனே

சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய  மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண  வெனதாளம்

காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு மான்முரு காவொரு  பெரியோனே
காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய  பெருமாளே.

502. அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி  யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து  பொருள்தேடிச்

சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து  அவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்று  அருள்வாயே

இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த  உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ  லுடையோனே

குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்த  தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த  பெருமாளே.

2. திருவானைக்கா (அப்பு)

503. அஞ்சன வேல்விழி யிட்ட ழைக்கவு
மிங்கித மாகந கைத்து ருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும்  நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பரம் வீணில விழ்த்துடுக் கவு  மிளைஞோர்கள்

நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு  மெவரேனும்
நிந்தைசெ யாதுமபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது  மொருநாளே

குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண் விக்ரம  கணராஜன்
கும்பிடு வார்வினை  பற்றறுப்பவன்
எங்கள் விநாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக சற்பகப்பிளை  யிளையோனே

துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்தச டானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய  பரிபாலா
துங்க கஜாரணி யத்திலுத்தம
சம்பு தடாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை  பெருமாளே.

504. அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண  ரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு  மணியாமல்

வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியா மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி  லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்டுகி லாடைச் சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ  னழிவேனோ

கொம்பனை நல்க கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி  யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை  யருள்பாலா

செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண  மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை  பெருமாளே.

505. அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத  வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல்  மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ  னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம னோதீத
சிவச்சொ ரூப மாயோகி  யென ஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத  மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர  வயலூரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய  மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர்  பெருமாளே.

506. ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத்  துறவோரை
ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
பாளிதப டீரத்  தனமானார்

காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமயி ராமக்  கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற்  புகல்வேனோ

பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப்  பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச்  சிறியோனே

சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள னேவற்  புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப்  பெருமாளே.

507. ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக
ளார்ம øத்தையு மெத்திவ ளைப்பவர்  தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ  ருடன்மாலாய்

மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
மாயெடுத்தகு லைப்பொடு பித்தமு
மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி  யதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
வீடு கட்டியி ருக்குமெ னக்குநி  னருள்தாராய்

பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
பீற லுற்றவு யுத்தக ளத்திடை  மடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு  குடனாட

ஏலம் வைத்தபு யத்தி லணைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை  யருள்வோனே
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள்  பெருமாளே.

508. உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை  யொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பாரி லொப்பார்கள்  கண்டிலேன்யான்

குரைக்கான வித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு  கொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்னா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின்  மங்குவேனோ

அரைக்காடை சுற்றார் தமிழ்க்கூட லிற்போய்
அனற்கே புனற்கேவ  ரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ  மர்ந்தவேளே

திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யான முற்றோர்சி  லந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி  தம்பிரானே

509. ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ  ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது  சிவஞானம்

சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ  னவியோமஞ்
சாரு மனுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல்  பெறுவேனோ

வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர்  களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க  வயலூரா

ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை  த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள்  பெருமாளே.

510. கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள்  புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக் காரிகள்  மயலாலே

பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள்  முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் கோரருள்  புரிவாயே

மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண வாளக் கோலமு  முடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய  அதிதீரா

அரவணை தனி லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும்  அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக் காவுறை  பெருமாளே.

511. காவிப் பூவை யேவை யிகல்வன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன  இருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மதமிவை  சிதையாத

பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை  யினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார  வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள  நினையாதோ

கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில்  விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த  வடிவேலா

ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி  லுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய  பெருமாளே.

512. குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன  பொதிகாயக்
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய  அதனாலே

சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையு  முயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட  அருள்வாயே

ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய  கரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்கு லாவி யின்புற  வுறைவோனே

கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறு  மருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள்  பெருமாளே.

513. நாடித் தேடித்  தொழுவார்பால்
நானத் தாகத்  திரிவேனோ
மாடக் கூடற்  பதிஞான
வாழ்வைச் சேரத்  தருவாயே
பாடற் காதற்  புரிவோனே
பாலைத் தேனொத்  தருள்வோனே
ஆடற் றோகைக்  கினியோனே
ஆனைக் காவிற்  பெருமாளே.

514. நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜீமுத நேரென  நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென  நைந்துசீவன்

குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில  மைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய  மென்றுசேர்வேன்

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மனங்க ளித்திட லாமோது ரோகித  முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோ கெடாதினி
வரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ  மென்றுபேசி

அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன்  மைந்தனான
அனங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய
னலங்கயப்பதி வாழ்வான தேவர்கள்  தம்பிரானே.

515. பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு  முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை  நெறிபேணா

விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது போங்க பாடனை  மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது  மொருநாளே

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக  ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி  யருள்பாலா

முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன்  மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள்  பெருமாளே.

516. வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
வீதிக் கேதிரி பப்பர மட்டைகள்  முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
வேளுக்காண்மைசெ லுத்தச மர்த்திகள்  களிகூருஞ்

சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
காசற் றாரைபி தத்திலொ ழிச்சிகள்
தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
மோகப் போகமு யக்கிம யக்கிகள்
சூறைக் காரிகள் துக்கவ லைப்பட  லொழிவேனோ

காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு  முனிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல்  மருகோனே

ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
பாயச் சாலித ழைத்திர தித்தமு
தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி  யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு  பெருமாளே.

3. திருவண்ணாமலை (திருவருணை - தேயு)

517. குமர குருபர குணதர நிசிசர
திமிர தினகர சரவண பவகிரி
குமரி சுதபகி ரதிசுத சுரபதி  குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
கொடிய வினையனை யவலனை யசடனை  யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
களவி னொடுபொரு ளளவள வருளிய
கலவி யளறிடை துவளுறும் வெளிறனை  யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
சுருதி புடைதர வருமிரு பரிபுர
கமல மலரடி கனவிலு நனவிலு  மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
மறுகி யலைபட விடந்தி யுமிழ்வன
சமுக முககண பணபணி பதிநெடு  வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
கனக கிரிதர தரவெகு கரமலர்
தளர வினியதொ ரமுதினை யொருதனி  கடையாநின்

றமரர் பசிசெட வுதவிய க்ருபைமுகில்
அகில புவனமு மளவிடு குறியவன்
அளவு நெடியவ னளவிட அரியவன்  மருகோனே
அரவு புனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
அறிவை யறிவது பொருளென அருளிய  பெருமாளே.

518. அருவ மிடையென வருபவர் துவரிதழ்
அமுத பருகியு முருகியு ம்ருகமத
அளக மலையவு மணிதுகி லகலவு  மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ
டணையு மழகிய கலவியு மலமல  முலகோரைத்

தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு மிளமையு மலமலம் விபரித
சமய கலைகளு மலமல மலமரும்  வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமர பரிபுர சரணமு மவுனமு  மருள்வாயே

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட
னுருளை யிருசுடர் வலவனு மயனென  மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
உடைய வொருவரு மிருவரு மருள்பெற  வொருகோடி

தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன
திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு  முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய  பெருமாளே.

519. கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
பிசித அசனம றவரிவர் முதலிய
கலக விபரித வெகுபர சமயிகள்  பலர்கூடிக்
கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
கதறி வதறிய குதறிய கலைகொடு
கருத அரியதை விழிபுனல் வரமொழி  குழறாவன்

புருகி யுனதருள் பரவுகை வரில்விர
கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
லுணர்வு கெடிலுயில் புணரிரு வினையள  றதுபோக
உதறி லெனதெனு மலமறி லறிவினி
லெளிது பெறலென மறைபறை யறைவதொ
ருதய மரணமில் பொருளினை யருளுவ  தொருநாளே

தருண சததள பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர
தகனி கவுரிப வதிபக வதிபயி  ரவிசூலி
சடில தரியநு பவையுமை திரிபுரை
சகல புவனமு முதவிய பதிவ்ருதை
சமய முதல்வித னயபகி ரதிசுத  சதகோடி

அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகருறை சரவண குரவணி  புயவேளே
அடவி சரர்குல மரகத வனிதையு
மமரர் குமரியு மனவர தமுமரு
கழகு பெறநிலை பெறவர மருளிய  பெருமாளே.

520. துகிலு ம்ருகமத பரிமள அளகமு
நெகிழ இருதன கிரியசை தரஇடை
துவள மனிதரு மமரரு முனிவரு  முடனோடித்
தொடர வனமணி மகரமி லகுகுழை
யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
சுருதி மொழிவன கயல்விழி புரள்தர  நடுவாக

வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
வனச பதயுக பரிபுர மொலிபட
மறுகு தொறுமுல வியினிய கலவியை  விலைகூறும்
வரைவி லரிவையர் தருசுக சலதியி
லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவ  தொருநாளே

முகிலு மதியமும் ரவியெழு பரவியு
நெடிய குலைமிட றிடறமு துககன
முகிடு கிழிபட வளர்வன கமுகின  மிசைவாளை
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
தடமு முளரிய அகழியு மதில்களு
முழுது முடையதொ ரருணையி லுறைதரு  மிளையோனே

அகிலு மருதமு முகுளித வகுளமு
மமுத கதலியும் அருணமும் வருடையு
மபரி மிதமத கரிகளு மரிகளு  முடனேகொண்
டருவி யிழிதரு மருவரை தனிலொரு
சவர வனிதையை முனிதரு புனிதையை
அவச முடன்மல ரடிதொழு துருகிய  பெருமாளே.

521. மகர மெறிகடல் விழியினு மொழியினு
மதுப முரல்குழல் வகையினு நகையினும்
வளமை யினுமுக நிலவினு மிலவினு  நிறமூசும்
மதுர இதழினு மிடையினு நடையினு
மகளிர் முகுளித முலையினு நிலையினும்
வனச பரிபுர மலரினு முலரினு  மவர்நாமம்

பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
முருகி நெறிமுறை தவறினு மவரொடு
பகடி யிடுகினு மமளியி லவர்தரு  மநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுத
லருணை நகர்மிசை கருணையொ டருளிய
பரம வொருவச னமுமிரு சரணமு  மறவேனே

ககன சுரபதி வழிபட எழுகிரி
கடக கிரியொடு மிதிபட வடகுல
கனக கனகுவ டடியொடு முறிபட  முதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மரகத துரகத ந்ருபகிரி  மயில்வாழ்வே

தகன கரதல சிவசுத கணபதி
சகச சரவண பரிமள சததள
சயன வனசரர் கதிபெற முனிபெறு  புனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வன
தருண புளகித ம்ருகமத தனகிரி
தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய  பெருமாளே.

522.  முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
முதிய மதியது முகமென நுதலிணை
முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி  யெனமூவா
முளரி தனின்முகு ளிதமலர் முலையென
முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
மொழிய வரியதொர் தெரிவையர் வினையென  மொழிகூறிப்

பகலு மிரவினு மிகமன மருள்கொடு
பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
பழுது மறஅவர் பரிவுற இதமது  பகராதே
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
விகட முடனடை பயில்மயில் மிசைவரு
பவனி தனையநு தினநினை யெனஅருள்  பகர்வாயே

புகல வரியது பொருளிது எனவொரு
புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
பொதுவை யிதுவென தவமுடை முனிவர்கள்
புரமு மெரியெழ நகையது புரிபவர்
புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
புடவி வழிபட புதைபொருள் விரகொடு  புகல்வோனே

அகில கலைகளு மறநெறி முறைமையு
மகில மொழிதரு புலவரு முலகினி
லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை  யதனாலே
அறுவர் முலையுணு மறுமுக னிவனென
அரிய நடமிடு மடியவ ரடிதொழ
அருணை நகர்தனி லழகுடன் மருவிய  பெருமாளே.

523. முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
முலைக ளளவிடு முகபட பகடிகள்
முதலு முயிர்களு மளவிடு களவியர்  முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
முனைகொ ளயிலென விழியெறி கடைசிய  ரநுராகம்

மருவி யமளியி னலமிடு கலவியர்
மனது திரவிய மளவள வளவியர்
வசன மொருநொடி நிலைமையில் கபடியர்  வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமு மிருபெரு சரணமு  மறவேனே

கருதி யிருபது கரமுடி யொருபது
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
கடிய வியனகர் புகவரு கனபதி  கனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது கவிவிழ
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
களரி தனிலொரு கணைவிடு மடலரி  மருகோனே

சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
தரும னவர்பதி குடிவிடு பதனிசை  மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
தலையள் துகிலிடை யழகிய குறமகள்
தனது தனமது பரிவொடு தழுவிய  பெருமாளே.

524. விடமு மமுதமு மிளர்வன இணைவிழி
வனச மலதழல் முழுகிய சரமென
விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல  வொருஞான
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென
மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
விழையு மிளநகை தளவல களவென  வியனாபித்

தடமு மடுவல படுகுழி யெனஇடை
துடியு மலமத னுருவென வனமுலை
சயில மலகொலை யமனென முலைமிசை  புரள்கோவை
தரள மணியல யமன்விடு கயிறென
மகளிர் மகளிரு மலபல வினைகொடு
சமையு முருவென வுணர்வொடு புணர்வது  மொருநாளே

அடவி வனிதையர் தனதிரு பரிபுர
சரண மலரடி மலர்கொடு வழிபட
அசல மிசைவிளை புனமதி லினிதுறை  தனிமானும்
அமர ரரிவையு மிருபுடை யினும்வர
முகர முகபட கவளத வளகர
அசல மிசைவரு மபிநவ கலவியும்  விளையாடும்

கடக புளகித புயகிரி சமுகவி
கடக கசரத துரகத நிசிசரர்
கடக பயிரவ கயிரவ மலர்களும்  எரிதீயும்
கருக வொளிவிடு தனுபர கவுதம
புனித முனிதொழ அருணையி லறம்வளர்
கருணை யுமைதரு சரவண சுரபதி  பெருமாளே.

525. கமரி மலர்குழல் சரிய புளகித
கனக தனகிரி யசைய பொருவிழி
கணைக ளெனநுதல் புரள துகிலதை  நெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளி
பரவ இணைகுழை யசைய நகைகதிர்
கனக வளைகல நடைகள் பழகிகள்  மயில்போலத்

திமிரு மதபுழு சொழுக தெருவினி
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
திலத மணிமுக அழகு சுழலிக  ளிதழூறல்
திரையி லமுதென கழைகள் பலசுளை
யெனவு மவர்மயல் தழுவு மசடனை
திருகு புலைகொலை கலிகள் சிதறிட  அருள்தாராய்

குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர  எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
டமட டமடம டமட டமவென
குமுற திமிலைச லரிகி னரிமுத  லிவைபாட

அமரர் முனிவரு மயனு மனைவரு
மதுகை மலர்கொடு தொழுது பதமுற
அசுரர் பரிகரி யிரத முடைபட  விடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெற
அழகு சரண்மயில் புறம தருளியொ
ரருண கிரிகுற மகளை மருவிய  பெருமாளே.

526. கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
கணவகெட் டேனெனப்  பெறுமாது
கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
கதறிடப் பாடையிற்  றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
பறைகள்கொட் டாவரச்  சமனாரும்
பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
பரிகரித் தாவியைத்  தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
றருணையிற் கோபுரத்  துறைவோனே
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
தரியசொற் பாவலர்க்  கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
புனமறப் பாவையைப்  புணர்வோனே
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
பொருமுழுச் சேவகப்  பெருமாளே.

527. கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொடுத்
திலகுகட் சேல்களிப்  புடனாடக்
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
களவினிற் காசினுக்  குறவாலுற்

றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
றுயர்பொருட் கோதியுட்  படுமாதர்
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
புணையிணைத் தாள்தனைத்  தொழுவேனோ

மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
செறிதிருக் கோலமுற்  றணைவானும்
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
றிடஅடற் சூரனைப்  பொரும்வேலா

அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
றருணையிற் கோபுரத்  துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப்  பெருமாளே.

528. பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப்  படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட்  டலைநீரிற்

பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத்  துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற றோதிடப்  பெறுவேனோ

கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக்  கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக்  கொடியோனென்

றரியநற் பாடலைத் தெரியுமுற் றோர்கிளைக்
கருணையிற் கோபுரத்  துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப்  பெருமாளே.

529. தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு  நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
தறுகண்மத வேள்தொ டுத்த  கணையாலே

வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
மருவுமென தாவி சற்று  மழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின்மிசை யேறி நித்தம்  வரவேணும்

கருணையக லாவி ழிச்சி கள்பமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி  மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த  கழல்வீரா

அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
அருணைநகர் கோபு ரத்தி  லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட  பெருமாளே.

530. முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும்  வசையாலும்
மொழியுட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜனுக்கு  மழியாதே

புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி  புயமீதே
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம்  வரவேணும்

எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி  லுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத சித்ர  மணிமார்பா

செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த  குருநாதா
திசைமுகன் ராரி மற்று மறியபல தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar