ராமசாமிப் படையாச்சி ஒருநாள் நள்ளிரவில் எழுந்து பக்கத்து வீட்டுக் கொட்டகைக்குப் போய், செங்கோடா! செங்கோடா! என்று கதவு தட்டினான். செங்கோடன் எழுந்து வெளியே வந்து என்ன வேண்டும்? இந்நேரத்தில் வந்து எழுப்புகிறாயே என்று கேட்டான். கொஞ்சம் நெருப்புக் குச்சி தா! சுருட்டு பிடிக்க ஆசையாக இருக்கிறது என்றான் ராமசாமி. என்ன வேடிக்கையாக இருக்கிறது. ராமசாமி! கையில் லாந்தர் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறாய். என்னைத் தீக்குச்சி கேட்கிறாயே! என்றான் செங்கோடன். லாந்தர் பிடித்துக்கொண்டு போன ராமசாமி தன்னிடமே நெருப்பு இருப்பதை மறந்துவிட்டு, நள்ளிரவில் செங்கோடனிடம் போய்த் தீக்குச்சி கேட்கிறான். இதயத்திலே ஆண்டவனை வைத்துக்கொண்டு ஆண்டவன் இருக்குமிடம் எங்கே? எங்கே? என்று கேட்டுத்திரியும் அறியாமையை விளக்குவதற்காக ராமகிருஷ்ணர் இந்தக் கதையைச் சொன்னார்.
ஆண்டவன் இங்கே இருப்பதை ஒருவன் கண்டால் வெளியே ஜகத் முழுதும் பரவியிருப்பதையும் காண்பான் என்று தன் மார்பைத் தொட்டுக் காட்டினார். இதயத்தில் ஈசனைக் காணாவிடில் வேறு எங்கேயும் காணமாட்டான். இதயமென்னும் கோயிலில் ஆண்டவன் இருப்பதைக் கண்டுகொண்டால் பிறகு காசியிலும் காஞ்சியிலும் காண்பான். உலகமெல்லாம் ஒரு கோயிலாகவும் அந்தப் பெரிய கோயிலில் அவன் வீற்றிருப்பதையும் காண்பான். கடவுள் தன் இதயத்துக்குள் இருப்பதை உணராமல் வெளியே வெகு தூரத்தில் வானத்திலோ, அதற்கும் மேலேயோ இருப்பதாக எண்ணித் தேடும் வரையில் அறியாமை மூடிக் கொண்டிருப்பதாக நிச்சயமாக வைத்துக் கொள்ளலாம். ஞான விளக்கு ஏற்றினதும் தன் உள்ளத்திலேயே ஆண்டவன் கோயில் கொண்டிருப்பது பிரகாசமாகும்.
தனக்குள் ஆண்டவனைக் காண்பது என்றால் உண்மையைப் பின்னொருவன் சொன்னதைக் கேட்டு ஆம் என்று தலையாட்டுவதல்ல, உண்மையைக் கேட்டறிந்தபின், அந்த உண்மை உணர்ந்ததன் காரணமாகத் தன் வாழ்க்கை அதற்கு ஏற்றாப்போல் மாறவேண்டும். தன் இதயத்தில் பகவான் இருக்கிறான் என்று கண்டுவிட்ட ஒரு விவேகி அப்படிக் கண்டபின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிக் கொள்வான். கெட்டுப்போய்விட்டது என்று எண்ணிய பண முடிப்பு தன் ஜேப்பிலேயே இருப்பதை அறிந்ததும் எப்படி ஒருவன் நடந்து கொள்வான்? அல்லது, தன் குழந்தையைச் சொப்பனத்தில் தேடித் தேடி அலைந்து அழுது, பிறகு தூக்கம் தீர்ந்து தன் பக்கத்திலேயே குழந்தை படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட தாய் ஒருத்தி எப்படி நடந்து கொள்வாள்? யோசியுங்கள். இதயத்தில் பகவான் கோயில் கொண்டிருக்கிறான் என்றால் இவ்விதமான மகிழ்ச்சியைக் காணவேண்டும்.
கோபாலன் எங்கே போய்விட்டான், போனவன் இன்னும் திரும்பவில்லையே, உனக்கு ஏதாவது தெரியுமா? என்று ஒருநாள் யசோதை கவலையுடன் ராதையைக் கேட்டாளாம். தூங்கிக் கொண்டிருந்த ராதை எழுந்து வணங்கி, தாயே! ஏன் கவலைப்படுகிறாய்? கண்ணை மூடிக் கொண்டு கோபாலனைத் தியானித்தாயானால் கோபாலன் வந்து விடுவான் என்றாள். யசோதையும் அப்படியே செய்து கோபாலனை அடைந்தாள். இது உன்னுடைய பக்தியின் பயனாகும். எனக்கும் இந்தச் சக்தியைத் தரமாட்டாயா? என்று யசோதை, ராதையிடம் கேட்டு வரம் பெற்றாளாம். நாம் அனைவரும் ராதை, யசோதை இவர்களைப் போலவே கோபாலனை எப்போதும் எங்கேயும் காணலாம். ஆனால் ராதையைப் போல் யசோதையைப் போல் கோபாலனை விரும்பவேண்டும். இதயத்தில் விருப்பம் உதயமாக வேண்டும். விருப்பம் உண்டானால் தரிசனம் தருவான் என்பது கடோபநிஷதம்.