பதிவு செய்த நாள்
20
ஆக
2015
05:08
பேரண்டத்தைப் படைத்தாய், உன் பெருமை சிந்தைக்கு எட்டாது, நீ இதையெல்லாம் செய்தாய். அதையெல்லாம் செய்தாய், என்றெல்லாம் ஆண்டவனைத் தியானிப்பதில் என்ன பயன்? என்று ஒரு தடவை ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பிரம்ம சமாஜத்துத் தலைவரைப் பார்த்துச் சொன்னார். பெற்ற தகப்பனெதிரில் உட்கார்ந்து மகன், ஆஹா! என் தகப்பனுக்கு இவ்வளவு சேவகர்கள், இவ்வளவு குதிரைகள், வண்டிகள், தோட்டங்கள் இருக்கின்றன என்று கணக்கிடுகிறானோ? இல்லை. அன்புள்ள மகன் தகப்பனாருடைய செல்வத்தை மதிப்புப் போட்டுக்கொண்டிருக்க மாட்டான். தகப்பனுடைய அன்பைக்கூட, மகன் அது ஒரு விசேஷம் என்று நினைக்கமாட்டான்.
நாம் ஆண்டவனுடைய மக்கள். அவன் அன்பு ஒரு இயற்கை நியதி. அதைப்பற்றி வியக்கவும் பேசவும் எண்ணவும் வேண்டியதில்லை. ஆனபடியால் இவற்றைப் பற்றியெல்லாம் பேசிப் பொழுதுபோக்காமல் நேராக ஆண்டவனை அடையுங்கள்; மனைவி புருஷனிடம் செல்வதுபோல் அவனிடம் செல்லுங்கள். குழந்தை தாயிடம் செல்வதுபோல் நெருங்குங்கள், இதை செய், அதைச் செய் என்று பயப்படாமல் குழந்தையோ மனைவியோ கேட்பதுபோல் கேளுங்கள். ஆண்டவனை வெகுதூரத்தில் நிறுத்தித் துதித்தால் அவனை எப்படிக் கட்டி அணைப்பீர்கள்? ஐயோ, அவனை எப்படி நான் நெருங்குவேன் என்று பயந்து போவீர்கள். ஆண்டவன் உங்களுக்கு மிகச் சொந்தம், மிக நெருங்கி அளவளாவக் கூடிய பந்து என்று எண்ணுங்கள்.
இது பக்தி மார்க்கத்தின் ரகசிய சூத்திரம், பக்தியில் பயமில்லை, வியப்பில்லை, வணக்கமுமில்லை. தைரியம், அன்பு, நிச்சயம், நம்பிக்கை இவையே பக்தியின் லக்ஷணங்கள், ஆரம்பத்தில் தயக்கமும் அச்சமும் இருக்கும். பக்தி முதிர்ந்ததும் அவை தீர்ந்துபோய் தைரியம் ஏற்படும். பக்தன் ஆண்டவனை ரொம்பவும் உரிமையோடு நெருங்குவான். தம் சீடருக்குள் ஒருவருடைய தாயார் ராமகிருஷ்ணரிடம் வந்து எனக்கு வயதாயிற்று, நான் குடும்பக் கவலைகளை விட்டுவிட்டு பிருந்தாவனம் சென்று என்பாட்டுக்கு ராதையின் சன்னிதியில் துறவி நிலையில் இருக்க விரும்புகிறேன் என்று சொன்னாள். பரமஹம்ஸர் கண்டுகொண்டார் - அந்தக் கிழவியம்மாள் நிலை இதற்கு இடம் தராது. இது வெறும் மனக்கோட்டையான விரக்தி, குடும்பத்தில் அவளுக்கு உள்ள பற்று நீங்கவில்லை என்று.
அம்மா! உனக்கு உன் பேத்தியிடம் உள்ள அன்பு எனக்குத் தெரியும். நீ பிருந்தாவனம் அல்லது காசி அல்லது வேறு எங்கே போனாலும் பேத்தியின் நினைவு கூடவே இருந்துகொண்டேயிருக்கும். அந்தக் குழந்தையின் உடம்பு எப்படி யிருக்கிறதோ அவளைச் சரியாய்ப் பார்த்துக் கொள்கிறார்களோ இல்லையோ, என்றெல்லாம் யோசித்துக் கொண்டேயிருப்பாய். உன் உடல் பிருந்தாவனத்திலிருந்தாலும் உன் உள்ளம் பேத்தியின் பக்கத்தில் தான் இருக்கும். ஆனபடியால் ஒன்று செய். உன் பேத்தியே தேவி என்று நினைத்துக்கொண்டு அந்தக் குழந்தையை அன்பு செய். குடும்பத்தில் இருந்து கொண்டு பேத்தியைக் கவனித்துக்கொண்டே இரு, ஆனால் அவள் ஸ்ரீராதை என்று உள்ளத்தைப் பக்குவப்படுத்திக்கொள். குழந்தையிடமுள்ள அன்பெல்லாம் தேவியிடமுள்ள பக்தியாக முடியும். குழந்தையை எடுத்துச் சீராட்டும்போதும் உணவு ஊட்டும்போதும் முகத்தில் சாந்து இடும்போதும் ஸ்ரீதேவிக்கே இதையெல்லாம் செய்வதற்தாக எண்ணிக் கொண்டு செய். அப்போது ஊரிலேயே குடியிருந்து கொண்டிருந்தாலும் பிருந்தாவனம் போய்க் கண்ணனைத் தியானித்துக் கொண்டு துறவு நிலையிருந்த பயனை அடைவாய் என்று உபதேசித்தார்.
யார் மீது பிரியம்கொண்டு அன்பு செய்தாலும் அந்தக் குழந்தையோ, காதலியோ, தாயோ, தகப்பனாரோ, நண்பனோ, ஆண்டவன் அல்லது தேவியின் சொரூபம் என்று தியானித்துப் பழகிக்கொள்வது ராமகிருஷ்ணர் உபதேசித்தமுறை, மிகவும் பயன்தரக்கூடிய சுலபமான முறை, அனைவரும் அனுசரிக்கக்கூடியவழி, வாழ்க்கை புனிதமாகும் வழி.