பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அதன் அடிப்படையில் மாதங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டது. சமஸ்கிருதத்தில் இந்த பெயர்களை தமிழில் மொழிபெயர்க்கும்போது சிறு வித்தியாசம் ஏற்பட்டது. சில மாதங்களின் பெயர்கள் நட்சத்திரத்தின் பெயருடன் சம்பந்தம் இல்லாதது போல தோன்றினாலும் மொழியியல் வல்லுநர்கள் அவை காலப்போக்கில் ஏற்பட்ட மருவலே எனக் கூறுகின்றனர். சித்திரை மாதம் சித்ராபவுர்ணமியன்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. சமஸ்கிருதத்தில் இது சைத்ரமாதம் எனப்பட்டது. தமிழில் சித்திரை ஆனது. இம்மாதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாவைக்கூடசைத்ரோத்ஸவம் என்று குறிப்பிடுவர்.
சித்திரை முதல் நாளே சரியான புத்தாண்டு: ராசிமண்டலத்தில் மேஷம் முதல் மீனம் வரை பன்னிரண்டு ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியையும் ஒரு மாதத்தில் சூரியன் கடக்கிறது. சித்திரை முதல் நாளில் சூரியன் முதல் ராசியான மேஷத்தில் உச்சபலத்தோடு சஞ்சாரத்தைத் துவக்குகிறார். அதனை,மேஷரவி என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவர். முதல் ராசிக்குள் சூரியன் நுழையும் நாளை புத்தாண்டு நாளாக முன்னோர் கணித்தனர்.
தமிழ்ப்புத்தாண்டு நாளில் தயாரிக்க வேண்டிய பலகாரம் மற்றும்சைடு டிஷ் வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். இனிப்புக்கு அதிரசம், காரத்திற்கு பருப்புவடை அல்லது காரவடை, புளிப்புக்கு மாங்காய் பச்சடி, உவர்ப்புக்கு முறுக்கு வத்தல், துவர்ப்புக்கு வாழைப்பூ மசியல், கசப்புக்கு வேப்பம்பூ பச்சடி ஆகிய அறுசுவை உணவுகளும் சாப்பாட்டில் இடம்பெறும். நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, வாழ்வில் இன்ப துன்பம் என்று இருவித அனுபவம் உண்டு. இனிப்பு வகைகளை மட்டும் சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படும். இன்பமும் துன்பமும் சேர்ந்த கலவை இருந்தால் தான், வாழ்வில் தேடுதல் உணர்வு இருக்கும். உணவுக்கும், மன உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை உணர்த்துவதற்காகவே, புத்தாண்டின் துவக்க நாளில்அறுசுவையையும் உணவில் இடம்பெறச் செய்தனர்.