தர்ப்பணத்துக்கு தேவையானது எள். அந்த எள் மற்றும் தர்ப்பணத்தின் பெயரால் திருவாரூர் மாவட்டத்தில் திலதர்ப்பணபுரி என்னும் சிவத்தலம் உள்ளது. தற்போது செதலபதி என வழங்கப்படுகிறது. திலம் என்றால் எள். ராமர் தன் தந்தை தசரதருக்கும், சீதை எங்கிருக்கிறாள் என்று தனக்கு தெரிவித்த ஜடாயுவுக்கும் இத்தலத்தில் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் வந்தது. முக்தி அளிப்பவராக சிவன் இருப்பதால் முக்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோரை வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நரமுக விநாயகர் மனித முகத்துடன் இருக்கிறார். இங்கு ஓடும் அரசலாறு புனித தீர்த்தமாக உள்ளது. திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் கூத்தனூர் வழியாக 6 கி.மீ., சென்றால் செதலபதியை அடையலாம்.