பதிவு செய்த நாள்
25
செப்
2017
05:09
சரஸ்வதி பூஜைக்கு நைவேத்யம் படைக்க மங்களூரு ரவா லாடு, கல்கண்டு வடை தயாரிக்கும் விதம் இங்கு இடம் பெற்றுள்ளது.
மங்களூரு ரவா லாடு
தேவையான பொருட்கள்
சன்ன ரவை – 100 கி
கடலை மாவு – 100 கி
சர்க்கரை – 100 கி
தேங்காய் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – 8
நெய் – 200 கி
கிஸ்மிஸ் – 10
ஏலப்பொடி – சிறிதளவு
உப்புத்தூள் – சிறிதளவு
செய்முறை:
ரவை, கடலை மாவை தனித்தனியாக சலித்துக் கொள்ளவும். கிஸ்மிஸ், முந்திரியை துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை சன்னமாக துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கிஸ்மிஸ், முந்திரியை தனித் தனியாக வறுத்து வைக்கவும். பிறகு வாணலியில் பாதி நெய்யை விட்டு சூடானதும் ரவை சேர்த்து வாசனை வரும் பக்குவத்தில் வறுக்கவும். மீதி நெய்யை சூடாக்கி, கடலை மாவையும் வறுக்கவும். இன்னொரு வாணலியில் சர்க்கரையை தேவையான தண்ணீர் விட்டு கம்பிப்பாகு பக்குவம் வரும் வரை சூடாக்கவும். இதற்கிடையில், கடலைமாவு, ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், உப்புத்தூள், ஏலப்பொடியை ஒன்றாக்கி கலவையாக்கவும். சர்க்கரைப்பாகில் கலவையை, கட்டிபடாமல் கிளறியபடி சேர்க்கவும்.
சூடு ஆறும் முன் சிறு உருண்டைகளாக உருட்ட, சுவையான மங்களூரு ரவா லாடு
தயாராகி விடும்.
கல்கண்டு வடை
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு – 300 கி
பச்சரிசி – 100 கி
கல்கண்டு – 300 கி
உப்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 500 கி
செய்முறை: உளுந்தம்பருப்பு, அரிசியை தண்ணீரில் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். உப்பு, கல்கண்டு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிதமாக காய்ந்ததும், கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறிதளவு மாவை எடுத்து தட்டிப் போடவும். மேல் எழும்பி வந்ததும் திருப்பி விட்டு, வேக விடவும். மாவில் கல்கண்டுக்கு பதிலாக, வெல்லம் சேர்ப்பதும் உண்டு.