ஸ்வாமிகள், மஹரிஷி க்ரந்தங்களில் மனிதன் எப்படியிருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறதோ, அதன்படி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ப்ரசாரம் செய்து வந்ததோடல்லாமல் தானே பின்பற்றியும் வந்தவர். எந்த ஒரு விஷயத்தையும் ஸ்வாமிகள் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்த பிறகே உபதேசம் செய்வார். ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லியிருக்கிறபடி பக்தி செய்தால் தான் சாந்தி உண்டாகும் என்று சொல்லுவார்.
தனக்கு எவ்வளவோ சிரமங்கள் வந்தபோது பரிகாரம் தேடாத ஸ்வாமிகள் அவரைத் தேடி வரும், துயரத்தில் மூழ்கியிருக்கும், ஜீவன்களுக்குக் கருணையுடன் பரிகாரத்தை உபதேசிப்பார். ஸ்வாமிகள் சொல்லும் பரிகாரம் பண சிரமமோ, உடல் சிரமமோ கொடுக்காமல் மிகப் பெரிய பலனை மட்டுமே கொடுக்கும். ஸ்வாமிகள் பகவன் நாம ஜபத்தையோ அல்லது ச்லோக பாராயணத்தையோ, பரிகாரமாகச் சொல்வது வழக்கம். தான் எவ்வளவோ அஸாத்யமான விஷயங்களை அனுஷ்டித்தாலும் கூட, பிறத்தியாருக்கு சொல்லும் பொழுது மிகவும் எளிதான விஷயங்களைக் கொஞ்சம் கூட கர்வத்தின் சாயலே இல்லாத கருணையுடன் எடுத்துச் சொல்வார். ஸ்வாமிகளின் கருணையையும், இரக்கத்தையும் வார்த்தைகளால் விவரிப்பது கடினமே! அனுபவித்தவருக்கே தெரியும்.
ஒருவருடைய மனதுக்கு நிம்மதியை பகவத் விஷயமான தன் உபதேசத்தினாலும், காரியங்களாலும் கொடுப்பது என்கிற செயல் மற்ற எல்லா தர்மங்களுக்கும் மேல் என்று சொல்லுவார். இவர் ப்ரவசனங்களில் மனிதர்களை ஸ்தோத்திரம் செய்ததில்லை. மூலத்தில் உள்ளதை உள்ளபடி தன்னை மறந்து சொல்லிக் கொண்டே போவார்.
தன்னை அண்டி வருபவர்களிடம் உலக விஷயங்களை பேசாமல் பகவத் விஷயங்களைப் பற்றி மட்டும் பேசுவார். வருபவர்களுக்கு நேரம் இருக்கும் பக்ஷத்தில் ஸ்ரீமந் நாராயணீய படனம் செய்வார், அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் தகுதிக்கு ஏற்றாவாறும் பூஜை அல்லது நாம ஜபம் அல்லது ஸ்தோத்திர பாராயணம் இவைகளை உபதேசிப்பார். தன்னை அடிக்கடி வந்து பார்ப்பதை விட இந்த பகவத் பஜனத்தை விடாமல் தினம் செய்து வருவது தான் மேல் என்பார்.
பாராயணம் ப்ரவசனம் முதலியவைகளுக்கு விலை வைக்கமாட்டார். சாமான்கள் லிஸ்டும் நைவேத்யம் என்ற பெயரில் போடமாட்டார். தானே நைவேத்யத்திற்காக டைமண்ட் கல்கண்டு எடுத்துக் கொண்டு வந்து விடுவார். யாராவது நைவேத்யத்தைப் பற்றி அவரிடம் கேட்டால் ‘தங்கள் வீட்டில் எப்படி சவுகரியமோ அப்படி!’ என்று சொல்லி விடுவார். ஒருவர் வீட்டிற்கும் பாராயணமில்லாமல் செல்லமாட்டார். இவர் ஸ்ரீமத் சுந்தரகாண்ட, ராமாயண, பாகவத பாராயணம் செய்து எவ்வளவோ குடும்பங்களில் விவாஹம், தம்பதிகளுக்குள் வேறுபாடு முதலிய பிரச்சனைகள் சரியாகி இருக்கின்றன. இவ்வாறு நடப்பதை ஸ்வாமிகள் தனக்கு ஒரு பெருமையாகக் கருதாமல் அந்த க்ரந்தங்களுக்கு சக்தி இருக்கிறதென்றும் கேட்பவர்களின் நம்பிக்கையைப் பொறுத்துப் பலன் கிடைக்கிறது என்றும் சொல்லுவார்.