வாழ்க்கையில் ஏற்படும் சோகம் (இது கிடைக்கவில்லையே என்றோ, இது கைவிட்டுப் போய்விட்டதே என்றோ) மோஹம் (சாஸ்திரத்தை மீறினால் அதிக சம்பாத்யம் கிடைக்கிறதே என்றோ) பயம் (தற்காலத்தில் எல்லோருடைய மனது சரியில்லாத போது நம் போன்ற பக்தர்களை யார் ஆதரிப்பார்கள் என்றோ) இந்த மூன்றும் போய் பகவானிடம் நாம் ஈடுபட்டல் தான் உண்மையில் பக்தியுள்ளவன் என்று தீர்மானித்துக் கொள்ளலாம். பாண்டவர்களுக்கு அபார பக்தி என்றும், கண்ணன் அவர்களிடம் மிகவும் ஈடுபட்டான் என்றும், எதுதான் அவர் பாண்டவர்களுக்கு செய்யவில்லை என்று ஸ்ரீமந் நாராயணீயம் 86 வது தசகம் சொல்கிறது. ஒன்றை கவனிக்கணும். அர்ஜுனன் பக்தன், ஆதலால் பகவான் தேரோட்டினார். அந்தப் பெயரையே பெருமையாகக் கொண்டு இந்த திவ்ய தேசத்தில் அர்ச்சா ரூபியாய் விளங்குகிறான். அந்த பார்த்தஸாரதி மறு நாள் அர்ஜுனனைக் காக்க வேண்டி சூரியனையே மறைத்து ஜயத்ரத வதம் நடக்கச் செய்தான். ஆனால், முதல் நாள் அர்ஜுனனுடைய புத்ரனான அபிமன்யுவை பகவான் காப்பாற்றவில்லை என்று எந்த புத்தகமும் சொல்லவில்லை. தற்காலத்தவர்கள் தனக்கு பகவான் செய்துள்ள உபகாரம் எவ்வளவு என்று பார்க்காமல் ஏதேனும் குறையிருந்தால் பகவானைப் பஜித்து என்ன ப்ரயோஜனம் என்கிறார்கள்! நிற்க. பகவானை பஜிக்காதவர்கள் மனதில் எவ்வளவு வேதனையோடு இருக்கிறார்கள் என்பதைப் பாராமல் வெளித்தோற்றத்தை வைத்து அவர்கள் நல்லபடியாக இருப்பது போல் நினைக்கிறார்கள். ஓரளவு அது உண்மையானாலும் வாழ் நாள் முழுவதும் அவர்கள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியுமா?
நம் கண் முதலியது சரியாய் இருப்பது பகவான் கருணை என்று நன்றியுடன் பஜிப்பவனுக்கே முன் ஜன்ம கர்மத்தால் கஷ்டங்கள் வருகிறது என்றால் அந்த நன்றியின் அடையாளமே இல்லாதவன் எப்படியிருப்பான்?
பக்தியுள்ளவன் (50 அடி தோண்டினால் நீர் கிடைக்கும் என்றால் ஒரே இடத்தில் 50 அடி தோண்டுவது போல்) தொடர்ந்து வழிப்பட்டால், பகவான் நமக்கு எது நல்லதோ அதை அளித்தும் அல்லது நமக்கு எதனால் தீமைதான் ஏற்படுமோ அதை விலக்கியும் மனம் பரிபூர்ண சாந்தியுடன் இருக்க வைப்பார்.