‘பாடும் பணியே பணியாய் அருள்வாய் ’ என்று அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் சொல்கிறார். பஞ்சகாலத்தில் அன்னதானம் செய்வது போல் கலியில் தர்ம காரியத்திற்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் பகவந் நாம ஜபம், பாராயணம் போன்றவைகளை இடைவிடாது செய்வது தான் உத்தமமான மார்க்கம், கணபதி, முருகன், சிவன், அம்பாள், சூரியன், நாராயணன் போன்ற தெய்வங்கள் தத்தம் மந்த்ர ஜபத்தைக் காட்டிலும் அதிகமான ஸந்தோஷத்தை ராம நாம ஜபத்தால் அடைகிறார்கள். அதனால் நவக்ரஹங்களும் ப்ரீதி அடைந்து விடுகிறார்கள். இரண்டே எழுத்துள்ள ‘ராம ’ நாமம் 7 கோடி மஹா மந்த்ரங்களுக்கும் அரசன். பூமியில் எல்லாக் காரியத்தையும் ஸாதித்து விடக்கூடியது. எல்லா நன்மைகளும் கிடைப்பதால் தேவர்கள் கூட மிகவும் அன்புடன் ஜபிக்கிறார்கள்.
எல்லா மந்த்ரங்களையும் வேதங்களையும் ஜபித்தால் என்ன புண்ணியமோ அதைப் போல் கோடி மடங்கு புண்யம் ‘ராம ’ நாம ஜபத்தால் கிடைகிற படியால் எல்லா ஸம்பத்தக்களும் கிடைக்கும். எல்லா கஷ்டங்களும் நீங்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும். மறு பிறவி கிடையாது. இத்தனை மஹிமையுள்ள ‘ராம ’ நாம ஜபம் ஒரு மணி நேரம் ஜபித்தும், 336 தடவை ‘ அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித ’ என்ற ஆஞ்ஜனேய நாம ஜபமும் செய்து வர ‘ஸர்வ காரிய ஸித்தி ’ உண்டாகும்.
‘ஸ்ரீராம ஜயராம ஜயஜயராம ’
இந்த நாமாவை 21 தடவை சொன்னால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். கலியில் பயத்தைக் கொடுக்கக்கூடிய கோடிக்கணக்கான ஆபத்துக்களை ‘ராம ’ ‘ராம ’ என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்து போக்கிக் கொள்ள வேண்டும், பகவான் நாமாவை ஜபித்தால் என்ன லாபம் என்றால் ஜபிப்பவனின் குலத்திற்குக் கெடுதல் நினைப்பவனைக் கடுமையாக பகவான் தண்டிப்பான். நாம ஜபம் பண்ணுபவனுக்கு அபவாதம் ஏற்படாது. எந்தக் காரியமும் ஸித்திக்கும். பகவான் அவதார காலத்தில் எதையெல்லாம் நடத்தினானோ அதை எல்லாம் செய்யும் சக்தி முழுமையும் தன் நாமத்தில் வைத்துள்ளான். அந்த நாம ஜபம் எங்கும் யாரும் செய்யலாம். (சைதன்ய மஹா பிரபுவின் ‘சிக்ஷாஷ்டகம்’) பகவான் கிருபையால் எதுவும் நடக்கும். அந்த க்ருபை ஏற்படும் வரை பஜனம் செய்து கொண்டே இருக்க வேண்டும். (ஸ்ரீமந் நாராயணீயம்)
‘ஈச்வர பக்தி ஏற்படுவதற்கும் வ்ருத்தி அடைவதற்கும் ஈசுவரானுக்ரஹத்தை அடைந்து பேரானந்தத்தில் திளைத்துள்ள மஹான்களின் முகத்திலிருந்து வெளி வந்துள்ள பக்தி அம்ருதத்தைப் பொழியும் ஸ்துதிகளின் பாராயணம் அருந்துணையாகும். மூலாதாரத்திலிருக்கும் அக்னியானது ‘ரா ’ பீஜத்தைக் குறிக்கிறது. ஸஹஸ்ராரத்திலிருக்கும் ப்ராணன் ‘ ம ’ பீஜத்தைக் குறிக்கிறது. மூலாதாரத்திலிருக்கும் அக்னி ப்ராணனை ஸந்திக்க மேலெழும்பிச் சென்று அதனுடன் கலத்தல் தான் ‘ராம ’ என்னும் தாரக மந்தரப் பிறப்பாகும். இதனால் ஜீவாத்மாவுக்கு பயமற்ற தன்மை, சாகாத்தனமை, எல்லையற்ற ஆனந்தம், முடிவில் பகவானிடம் ஐக்கியம் முதலியவை ஸாதகமாகிறது. (ஸ்ரீமஹா பெரியவாள் வாக்கு)
சமயம் கிடைத்த போதெல்லாம் ‘ராம ராம ’ என்றோ அல்லது ‘சிவ சிவ ’ என்றோ சொல்லுங்கள். பிரதி தினம் அவரவர் க்ருஹத்தில் 10 நிமிஷம் ராம நாம ஜபம் குடும்பத்தில் அனைவரும் செய்து வந்தால் நித்ய க்ஷேமமும் பிரம்மானந்தமும் கிடைக்கும். (மஹா பெரியவாள் வாக்கு).
ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள அஜாமிள சரித்திரத்தை ஒட்டி ஸ்வாமிகள் பாபத்தை வேரோடு அழிப்பதில் பகவன் நாமாவிற்கு ஈடு இணை கிடையாது என்று வற்புறுத்திச் சொல்வார். இவ்வளவு சுலபமாக உள்ள மார்கத்தை விட்டுவிட்டு ஜனங்கள் தேவையில்லாமல் உடலை வருத்திக் கொண்டும் வீண் செலவு செய்து கொண்டும் பாபத்தை தொலைக்க வேறு மார்க்கம் தேடுகிறார்களே என்று வருத்தப்படுவார். பகவான் நாமா ஒன்றே போதும் என்று திரும்ப திரும்ப சொல்வார்.