137 அடி உயர திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டது. இதனை திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் கட்டத் தொடங்கினார். பணியாளர்களுக்கு பன்னீர் இலையில் திருநீறு மட்டும் கொடுப்பார். அருகிலுள்ள தூண்டுகை விநாயகர் கோயிலுக்கு சென்றதும் பிரித்து பார்ப்பர். அவரவர் செய்த வேலைக்கு தகுந்த கூலி அதில் இருக்கும். நாளடைவில் இந்த அதிசயம் நின்று போனது. தேசிகமூர்த்தி சுவாமிகள்,“செந்தூர் முருகா! கோபுரப்பணி முடிக்க வழியில்லையே என்ன செய்வேன்?” என வருந்தினார். ”காயல்பட்டினத்திலுள்ள வள்ளல் சீதக்காதியிடம் பொருள் பெற்று பணியை தொடங்கு,” என்றார் முருகன். அவரை அணுகிய போது, உப்பு மூடை ஒன்றை தானம் கொடுத்தார். அதை கோயிலுக்கு எடுத்து வந்த போது, தங்கக்காசுகள் இருந்தன. அதன்பின் கோபுரப்பணி முடிந்தது.