சிவபெருமானின் ஓர் அம்சமாகப் போற்றப்படுகிறார். சரபேஸ்வரர். சூலிணி மற்றும் பிரத்யங்கிராதேவி ஆகிய சக்திகளை தன்னுடைய இரு இறக்கைகளாக் கொண்டவர். அவரை வழிபடுவதால், சகலவிதமான தீய சக்திகளும் அழிக்கப்பட்டுவிடும். லிங்க புராணம், ஆகாச பைரவ கல்பம் முதலான ஞானநூல்களிலும்,பல தந்த்ர நூல்களிலும் சரபேஸ்வரர் ஆராதனை குறித்து மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
மாதப்பிறப்பு, பவுர்ணமி, அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் அவரை வழிபடுவதால், மிகுந்த பலன்கள் கிடைக்கும் என்றும், அவரையே உபாசனை மூர்த்தியாகக் கொண்டவர்கள் எல்லா காலங்களிலும் வழிபடலாம் என்றும் கூறுகின்றன, ஞானநூல்கள்.
"சங்க்ராந்தௌ விஷுவே சைவ பவுர்ணமாஸ்யாம் விசேஷத:.... ஸர்வதா ஸர்வகாமார்த்தி... என்று காலத்தை விளக்கியுள்ள நூல்கள் "போக மோக்ஷப்ரதம்... என்று கூறி, போகத்தையும் மோக்ஷத்தையும் சரபேச்வரர் அருளுவார் என்று உறுதியாக கூறுகின்றன.
இந்தத் தெய்வத்தின் ஆற்றலை நாம் பெற்று பலனடையும் விதம், பல மூல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றைத் தகுந்த குருவிடமிருந்து உபதேசம் பெற்றே உபாசிக்க வேண்டும். எனினும் சரபமூர்த்தியன் அனைவரும் கூறி வழிபடலாம்.
சரப சாந்தி ஸ்தோத்ரம் எனும் தொகுப்பில் வரும் ஸ்தோத்திரம் ஒன்றை கீழே அளித்துள்ளேன். பாராயணம் செய்து அருள் பெறலாம்.