பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
03:07
நமக்கு தண்ணீருக்குள் ஐந்து நிமிடம் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் 40 ஆண்டாக மூழ்கியிருந்த அத்திவரதர் வெளியே எழுந்தருளி காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இந்த அதிசயம் நிகழ்கிறது. ஆன்மிக நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம். ஒருவர் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியளிக்கும் தலம் இது. சிருங்கிபேரர் என்பவருக்கு ஹேமன், சுக்லன் என மகன்கள் இருந்தனர். கவுதம முனிவரிடம் வேதம் கற்றனர். ஒருமுறை பூஜைக்குரிய தீர்த்தத்தை குருநாதரிடம் அவர்கள் கொடுத்த போது, பாத்திரத்தில் இருந்து பல்லிகள் வெளியேறின. இதைக் கண்டு கோபித்த கவுதமர், கவனக்குறைவாக இருந்த சீடர்களைப் பல்லியாக மாறும்படி சபித்தார். அவர்கள் சாப விமோசனம் கேட்டு அழவே, காஞ்சிபுரம் வரதராஜரை வழிபடும்படி கூறினார். அதன்படி அவர்கள் சுயவடிவம் பெற்றனர். இதன் அடிப்படையில் தங்க, வெள்ளியாலான பல்லிகள் இங்கு உள்ளன. அவற்றை தொட்டு வழிபட்டால் முன்வினை பாவம் தீரும்.
கருவறையில் புண்ணியகோடி விமானத்தின் கீழ் வரதராஜர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தனி சன்னதியில் பெருந்தேவித்தாயார் அருள்புரிகிறாள். ஐந்து பிரகாரம் கொண்ட இங்கு ’அனந்தசரஸ்’ என்னும் புண்ணிய தீர்த்தம் உள்ளது. அதன் அடியில் மரத்தாலான அத்தி வரதர் சிலை ஒன்று பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுக்கு ஒருமுறை 48 நாட்கள் இவருக்கு பூஜை சிறப்பாக நடக்கும். இவரே இத்தலத்தின் ஆதிமூர்த்தியாவார். ஒரு சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தன்று பிரம்மா உள்ளிட்ட தேவர்களுக்கு காட்சியளித்தார் மகாவிஷ்ணு. அந்த கோலத்தை அத்தி மரத்தில் சிலையாக வடித்தார் பிரம்மா. அதை தேவலோக யானையான ஐராவதம் சுமந்தபடி பூலோகம் வந்தது. கோயில் இருக்கும் பகுதியை அடைந்ததும், யானை சிறிய மலையாக மாறியது. அதுவே ’அத்தி கிரி’ எனப்பட்டது. கிரி என்றால் மலை. அங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பின் அத்திவரதர் சிலையை முன்னிறுத்தி யாகம் ஒன்றை பிரம்மா நடத்தினார், குண்டத்திலிருந்து எழுந்த தீயால் சிலை சேதமடைந்தது. வருத்தமடைந்த பிரம்மா, “பெருமாளே! உன்னை எப்படி வணங்குவேன்?” என மனம் வருந்தினார். “சேதமடைந்த சிலையை இங்குள்ள திருக்குளத்தில் மூழ்க வைத்து, 40 ஆண்டுக்கு ஒருமுறை பூஜை நடத்து” என அசரீரி வானில் ஒலித்தது. பிரம்மாவும் ஒரு வெள்ளிப்பேழையில் சயனநிலையில் சிலையை வைத்து, குளத்தின் நீராழி மண்டபத்தின் அடியில் மூழ்க வைத்தார். நெருப்பால் ஏற்பட்ட உஷ்ணம் தீர, பெருமாள் நீருக்குள் குளிர்ந்த நிலையில் இருப்பதாக ஐதீகம். விழாவின் போது குளத்து நீரை வெளியேற்றி சிலையை வெளியே எடுப்பர். அத்திவரதரை முதல் முறையாக தரிசிப்பவர்கள் சொர்க்கத்தையும், இரண்டாம் முறையாக தரிசிப்பவர்கள் வைகுண்டத்தையும் அடைவர். ஆக.17 வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அத்திவரதர். முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் எழுந்தருள்வார்.
* எப்படி செல்வது: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ.,